×

மாமல்லபுரத்தில் விநாயகர் கோயிலை நவீன முறையில் நகர்த்தி சாதனை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள வடக்கு மாமல்லபுரத்தில் அண்ணல் காந்தி தெரு, அண்ணல் அம்பேத்கர் தெரு இணையும் இடத்தில் ஒரே வளாகத்தில் ஊத்துக்காட்டு அம்மன், கங்கையம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த, ஆலயம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வளாகத்தில் ஊத்துகாட்டு அம்மன் – கங்கையம்மன் கோயிலுக்கு இடையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு 15 அடி உயரம் உள்ள விநாயகர் கோயில் அமைக்கப்பட்டது. இதனால், திருவிழா உள்ளிட்ட நேரங்களில் பந்தல் அமைக்க முடியாமலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய முடியாமலும் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

இந்த கோயிலை, சுற்றி வலம் வந்து சாமி கும்பிட முடியவில்லையே என்ற ஏக்கமும் பக்தர்கள் மத்தியில் இருந்தது. மேலும், விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகம் வருவதால் நிற்க கூட இடம் இல்லாமல் அவதிபட்டு வந்தனர். இந்நிலையில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இதனை இடிக்காமல் நகர்த்த கோயில் நிர்வாகம் மற்றும் ஊர் முக்கியதஸ்கர்கள் முடிவு எடுத்தனர். இதையடுத்து, எந்தவித சேதமும் ஏற்படாமல் கட்டிடத்தை நகர்த்துவதற்கு தனியார் நிறுவனம் முன்வந்தது. பின்னர், தனியார் நிறுவன ஊழியர்களுடன், வடக்கு மாமல்லபுரம் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நேற்று காலை பணிகளை தொடங்கினர்.

முதல் கட்டமாக, விநாயகர் கோயிலை சுற்றிலும் 5 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது. அதை தொடர்ந்து, கோயிலின் கீழ்தளத்தில் 20க்கும் மேற்பட்ட ஜாக்கிகள் வைக்கப்பட்டு, ரயில் டிராக் மற்றும் உருளை கட்டைகள் உதவியுடன் கோயில் கொஞ்சம் கொஞ்சமாக பெயர்க்கப்பட்டது. கங்கையம்மன் கோயில் வளாகத்தில் இருந்து இடது புறமாக 18 அடி தூரத்திற்கு எந்த வித சேதமும் இல்லாமல் நகர்த்தி வைக்கப்பட்டது.

மேலும், விநாயகர் கோயிலை சின்ன சேதம் கூட அடையாமல் 18 அடி தூரம் நகர்த்தி வைத்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் பக்தர்கள் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில், கோயில் இடிக்கப்படாமல் நகர்த்தப்பட்டது மகிழ்ச்சி. இனிமேல், நாங்கள் கோயிலை சுற்றி வந்து நிம்மதியாக வழிபட முடியும். நவீன முறையில் கோயில் நகர்த்தப்பட்டது இப்பகுதியில் இதுவே முதல் முறை என பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

The post மாமல்லபுரத்தில் விநாயகர் கோயிலை நவீன முறையில் நகர்த்தி சாதனை appeared first on Dinakaran.

Tags : Vinayakar Temple ,Mamallapuram ,Anal Gandhi Street ,North Mamallapuram ,Anal Ambetkar Street ,Vinayagar Temple ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...