×

வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டு தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: ‘‘வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டு தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள்’’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்): ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40 சதவிகித காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவிகள் மூலம் மக்களை தூண்டி விட்டு மூடி விட்டனர்’ என்று பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகார வரம்புகளை மீறுகிற வகையில் தொடர்ந்து தமிழக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். இவரது செயல்பாடுகளை பார்க்கிற போது, மத்திய பா.ஜ.க. தலைவர்களால் ஏவி விடப்பட்டவராகவே இவரது கருத்துகள் அமைந்து வருகிறது. இத்தகைய கருத்துகளை கூறுவதற்கும், ஆளுநர் மாளிகையில் தொடர்ந்து கூட்டங்களை நடத்தி போட்டி அரசாங்கமாக செயல்படுவதை இனியும் அனுமதிக்க முடியாது.

வைகோ எம்.பி (மதிமுக பொதுச்செயலாளர்): வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் ஆளுநர். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து ஆளுநர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலி கொடுத்திருக்கிறார்கள், நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய ஆளுநர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): ஆளுநர் ஆர்.என்.ரவி நாவடக்கம் இல்லாமல் வாழ்வுரிமைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்து விட்டதாகவும், இப்போராட்டத்திற்கு வெளிநாட்டு சக்திகளின் கை இருப்பதாகவும் ஆளுநர் கூறியிருப்பது அமைதியாக போராடிய மக்களை கொச்சைப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து எதிரான கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கு விரோதமாக தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் ஆர்.என்.ரவி ஆளுநராக நீடிப்பதற்கான அருகதை அற்றவர். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி கருத்துக்கள் அபத்தமானது, மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் அனைத்தையும் எவ்வித முடிவும் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றால் அவை நிராகரிக்கப்பட்டதாக பொருள் என்று ஆளுனர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. மசோதாக்கள் அனைத்தையும் நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிடவில்லை. வெளிநாட்டினர் தூண்டுதல் பேரில் நடைபெற்ற போராட்டம் என்று ஆளுனர் கூறியிருப்பது மிக வன்மையாக கண்டிக்கதக்கது. ஆளுனரின் அத்துமீறிய செயலுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு குரல் எழுப்பி, தமிழகத்திலிருந்து வெளியேற்றிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வெளிநாட்டு அமைப்பினர் ஏராளமாகப் பணத்தைக் கொடுத்து உள்ளூர் மக்களைப் போராட்டத்திற்குத் தூண்டி அதன் மூலம் அந்த ஆலை மூடப்பட்டதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னெழுச்சியாக போராடிய மக்கள் மற்றும் அதற்கு எதிராக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்தவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

The post வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டு தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Governor R. N.N. Ravi ,Chennai ,Governor ,R.R. N.N. Ravi ,Dinakaran ,
× RELATED 4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி