×

தமிழ்நாடு – கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு கனிமவள கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை அமைப்பு

செங்கோட்டை: கனிமவள கடத்தலை தடுக்க கனிமவளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தமிழக-கேரள எல்லையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில் எம்சாண்ட், ஜல்லி கல், கருங்கல் உள்ளிட்ட கனிமவளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சட்ட விரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை தடுக்க கடந்த சில நாட்களாக தமிழ்நாடு – கேரள எல்லை பகுதியில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், சட்ட விரோதமாக அதிக பாரங்களை ஏற்றி சென்ற லாரிகளை பிடித்து அபராதம் விதித்தனர். இந்நிலையில் தென்காசி, கோவை, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சட்ட விரோதமாக கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துவதற்காக கனிமவளத்துறை உதவி இயக்குநர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்திற்கு திருச்சியில் பணியாற்றிய கனிமவளத்துறை உதவி இயக்குநர் சத்தியசீலன் தலைமையில், அருள்முருகன், சரவணன் ஆகிய மூன்று பேர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் நேற்று புளியரை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகள் அனைத்தும் முறையான சோதனைக்குட்படுத்தப்பட்டு ஆவணங்கள்
சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுப்பி வைக்கப்பட்டன. இது குறித்து சிறப்பு தனிப்படை அதிகாரி சத்தியசீலன் கூறுகையில், ‘தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கனிமவள சிறப்பு அதிகாரிகளை சோதனைக்காக அரசு நியமித்துள்ளது. எங்களது சோதனை நடவடிக்கை தொடரும்’ என்றார்.

The post தமிழ்நாடு – கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு கனிமவள கடத்தலை தடுக்க சிறப்பு தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kerala border ,Sengota ,Special Special Special Director ,Minerals Department ,Tamilnaga-Kerala border ,Special Persons Organisation ,Dinakaran ,
× RELATED தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு;...