×

குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்காதீர்கள்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

சின்னமனூர், ஏப். 6: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் கோடைமழையால், தேனி மாவட்டத்தில் உள்ள நதிகள், குளங்களில் நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது. தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நதிகள், குளங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும். இதில் உள்ள ஆபத்தை அறியாமல் விடுமுறை நாட்களில் அதிகளவில் மக்கள் நீர்நிலைகளில் குளிக்கின்றன. தண்ணீர் ஓடும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சின்னமனூர் அருகே துரைச்சாமிபுரம் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கலைவாணி. இவர் கணவர் மணிகண்டன் 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் தீனதயாளன் (9), மகள் மகாசக்தி (7). இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். கணவர் இறந்ததால், கலைவாணி தன் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அப்பகுதி அருகே உள்ள முல்லை பெரியாற்றில் கலைவாணி தன் 2 குழந்தைகளுடன் துணி துவைத்து கொண்டிருந்தார். குழந்தைகள் இருவரும் ஆற்றில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, இரு குழந்தைகளும் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த கலைவாணி கூச்சலிட்டதில், அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர். ஆனாலும், இரு குழந்கைளும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்த புகாரில், சின்னமனூர் போலீசார் இரு குழந்தைகளின் உடலை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இரு குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், ஆபத்தை உணராமல் குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது. பள்ளங்கள் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட நொடிகளில் இழுத்து சென்றுவிடுகிறது. தண்ணீரில் மூழ்குபவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உள்ளது. எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளை மிக கவனமாக பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும், என்றனர்.

The post குழந்தைகளை ஆற்றில் குளிக்க அனுமதிக்காதீர்கள்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Western Ghats ,Theni ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...