×

இளைஞர் குழு, வனத்துறையினர் நல்லிணக்க கைப்பந்து போட்டிகள்

கூடலூர், ஏப்.6:வனத்துறை மற்றும் கிராம மக்கள் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அல்லூர் கிராம கைப்பந்தாட்ட இளைஞர் குழுவினருடன் வனத்துறை கைப்பந்தாட்ட குழுவினர் நல்லிணக்க கைப்பந்தாட்ட போட்டிகள் நடத்த வனத்துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் அள்ளூர் பகுதியில் யானை தாக்கி இறந்த முதியவர் கரும்பனின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க சென்ற கூடலூர் கோட்ட உதவி வன பாதுகாவலர் கருப்பையா மற்றும் வனச்சரகர்கள் அங்கு கைப்பந்து விளையாடிய இளைஞர்களுடன் கலந்துரையாடினர். கைப்பந்து விளையாடிய இளைஞர்களின் தொழில், படிப்பு, குடும்ப சூழல் குறித்து கேட்டறிந்த உதவி வன பாதுகாவலர் அவர்களுக்கு தேவையான கைப்பந்து விளையாட்டு உபகரணங்களை வனத்துறை சார்பில் வழங்க உறுதியளித்தார்.

தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கிராம மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கிராம இளைஞர் குழுவுடன் கைப்பந்தாட்ட போட்டிகள் நடத்துவது குறித்தும் ஆலோசித்தார். இது குறித்த உதவி வன பாதுகாவலர் கருப்பையா கூறுகையில்,“கூடலூர் வனக்கோட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள், விவசாய பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் மற்றும் பாதிப்பு அவ்வப்போது உள்ளது. வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வனத்துறை சார்பில் தேவையான நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வனவிலங்குகள் நடமாட்டத்தை குறைக்கவும், பாதுகாப்பு ஏற்படுத்தவும் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் வனத்துறை சார்பில் பொதுமக்கள் நலன் கருதியே மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், பொதுமக்கள்- வனத்துறை இடையே நல்லுறவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை வலுப்படுத்தும் வகையில் வனத்துறை மற்றும் கிராம இளைஞர்களிடையே கைப்பந்து போட்டிகளை நடத்துவது மற்றும் விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்குவது குறித்து கோட்ட வன அலுவலரிடம் ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

The post இளைஞர் குழு, வனத்துறையினர் நல்லிணக்க கைப்பந்து போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Allur village ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்