×

டெல்லி தாதா தீபக் பாக்சர் மெக்சிகோவிலிருந்து நாடு கடத்தல்

புதுடெல்லி: அரியானாவை சேர்ந்தவர் தீபக் பாக்ஸர் என்ற தீபக் பஹல். குத்துசண்டை வீரரான தீபக் தேசிய குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்றவர். கடந்த 2021ம் ஆண்டு தாதா கோகியை டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இரண்டு பேர் சுட்டுக் கொன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற போலீசார் அந்த இருவரையும் சுட்டுக் கொன்றனர். இதன்பின் கோகியின் ரவுடி கும்பலுக்கு தீபக் தலைமையேற்றார். கட்டுமான அதிபர் அமித் குப்தாவிற்கும், தீபக்கிற்கும் மோதல் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு குப்தா சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு தீபக் பொறுப்பேற்று சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். அதில் மற்றொரு ரவுடி கும்பல் தலைவனான தில்லுவுடன் நெருக்கம் காட்டியதால் குப்தாவை போட்டு தள்ளியதாக தீபக் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.

ஆனால் கொல்கத்தாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். அவரை பற்றி தகவல் தெரிவித்தால் ₹3 லட்சம் பரிசு வழங்கப்படும் என டெல்லி போலீசார் அறிவித்தனர். மெக்சிகோவில் உள்ள கேன்கன் நகரில் தீபக் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க புலனாய்வு அமைப்பின் உதவியுடன் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் மெக்சிகோ சென்று தீபக்கை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் தீபக்கை நேற்று விமானம் மூலம் போலீசார் டெல்லி அழைத்து வந்தனர். பின்னர் தீபக் பலத்த பாதுகாப்புடன் பாட்டியாலா அவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 8 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post டெல்லி தாதா தீபக் பாக்சர் மெக்சிகோவிலிருந்து நாடு கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Delhi Dada ,Deepak Baksar ,Mexico ,New Delhi ,Deepak Bahal ,Deepak Boxer ,Ariana ,Deepak ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...