×

தனிமை மட்டும் போதும்

“ஒமிக்ரானின் உருமாற்ற வைரஸ்களின் பரவல், நாட்டில் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது. இதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் 90 சதவீத மக்களின் எதிர்ப்பு சக்தி வலிமையாக உள்ளது. யாருக்காவது ஒமிக்ரான் பாதிப்பு இருந்தால், அவர்கள் மருத்துவர்கள் ஆலோசனை பெற்று 6 நாட்கள் தனிமையில் இருந்தாலே போதுமானது. பெரிதாக வேறு சிகிச்சை ஏதும் தேவையில்லை’’ என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 2021, மே மாதம் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்ட உடனேயே, கொரோனா பரவலை தடுக்க அவர் மேற்கொண்ட மின்னல் வேக நடவடிக்கைகளை இந்த நாடே அறியும்.

பதவியேற்ற அன்று மாலை நடக்க இருந்த அமைச்சரவை கூட்டத்தை ஒத்தி வைத்து விட்டு, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். ஆட்சிக்கு வந்து 20 நாட்களிலேயே, அரசு மருத்துவமனைகளில் 18 ஆயிரம் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டன. அதிலும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு அரசு தனது நிதியில் இருந்து ரூ.46 கோடியில் 12 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகளை வாங்கியது.

அதை கொண்டுதான் 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை அப்போது திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மேலும் மூன்றரை கோடி தடுப்பூசிகளை உலகளாவிய டெண்டர்கள் மூலம் தமிழ்நாடு அரசு, நேரடியாக கொள்முதல் செய்தது. இதன் மூலம் மக்களை தேடி வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்பட்டது. லேசான மூச்சுத்திணறலுடன் வந்த கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஸ்பெஷலாக ‘ஜீரோ டிலே வார்டுகள்’ அமைக்கப்பட்டு, உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த வகையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் முதல்வர் காட்டிய அக்கறை, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. தற்போதும் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘‘தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை. ஆனாலும் இந்த அரசு அலட்சியமாக செயல்படாது என்பதை நிரூபிக்கும் வகையில் மாநிலத்தில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வரின் துரித நடவடிக்கையால் 7,000 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரசால் 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று 6 நாட்கள் தனிமையில் இருந்தாலே போதும். கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், அலட்சியமாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் 90 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி சிறப்பாக உள்ளது. அதன் காரணமாகத்தான் தமிழகத்தில் இறப்புகள் இல்லாமல் உள்ளது’’ என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தவிர தமிழ்நாட்டில் உள்ள 11,333 அரசு மருத்துவ நிர்வாகங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டுமென கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்ற நிலையை மாநில அரசு உருவாக்கியுள்ளது. இருப்பினும் கூட்டம் அதிகமுள்ள இடங்களிலும், மருத்துவமனை, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பும் மிக, மிக அவசியம்.

The post தனிமை மட்டும் போதும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu… ,
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...