×

திருமலை திருப்பதியில் வண்ண மயமான வசந்தோற்சவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

*திருமலையில் வசந்தோற்சவம் 3.4.2023 முதல் 5.4.2023 வரை

வண்ண மருள்கொள் அணிமேக வண்ணா! மாய அம்மானே!
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே! இமையோர் அதிபதியே!
தெண்ணல் அருவி மணிபொன்முத் தலைக்கும் திருவேங் கடத்தானே!
அண்ணலே! உன் னடிசேர அடியேற்கு ஆஆ என்னாயே.

நம் ஆழ்வார் அருளிய அற்புதமான பாசுரம். மலையப்ப சுவாமியை ஒரு தரம் நினைத்தாலே மனதுக்குள் புகுந்து தித்திப்பானாம். ஆனந்தத்தைக் கொடுக்கும் ஆனந்த விமானத்தின் கீழ் பிரம்மானந்த சொரூபமாய் அவன் திருக்காட்சி தருகிறான். நாளெல்லாம் அவனுக்கு திருநாள் தான். உற்சவங்கள்தான். தினம் ஆர்ஜித பிரமோற்சவம், கல்யாண உற்சவம், கண்டருள் பவனாயிற்றே. அத்தகைய உற்சவங்களில் ஒன்று சித்திரை வசந்த உற்சவம்.

திருமால் ஆலயங்களின் உற்சவங்கள் மற்றும் வழிபாடுகள் இரண்டு ஆகமங்களின் அடிப்படையில் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு உற்சவங்களும் எப்படிச் செய்யப்பட வேண்டும்? என்ன வேதபாடங்கள் பாராயணம் செய்ய வேண்டும்? என்ன அருளிச்செயல் ஓத வேண்டும்? என்ன நிவே தனம் சமர்ப்பணம் செய்ய வேண்டும்? போன்ற பல விபரங்கள் அதிலே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இரண்டு ஆகமங்களில் ஒன்று வைகானசம். இரண்டு பாஞ்சராத்ரம். வைகானசம் என்பது விகனச மகரிஷியால் அருளப்பட்ட ஆகமம். சாட்சாத் பகவானே விகனச மகரிஷியாக அவதரித்து ஆகமங்களை அருளிச் செய்ததாக நம்பிக்கை.பகவான் ஐந்து இரவுகளில் அருளிச்செய்த ஆகமம் பாஞ்சராத்ரம். திருத்தலங்களில் உற்சவாதிகள் இந்த இரண்டு ஆகமங்களின் அடிப்படையில் இருக்கின்றன. திருவரங்கத்தில் பாஞ்சராத்ர ஆகம அடிப்படையிலும் திருமலையில் வைகானச ஆகம அடிப்படையிலும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.

ஆகமத்தில் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய நித்திய உற்சவம், வளர்பிறை தேய்பிறை முதலிய பருவங்களில் செய்ய வேண்டிய பருவ உற்சவம், மாதங்களில் செய்ய வேண்டிய மாத உற்சவம், வருடங் களில் செய்ய வேண்டிய ஸம்வச்சர உற்சவம் மற்றும் பிரம்மோற்சவங்கள் மற்றும் சில சிறப்பு உற்சவங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு உற்சவத்துக்கும் ஒவ்வொரு காரண காரியம் இருக்கிறது. முக்கியத்துவம் இருக்கிறது. அப்படி திருமலையில் சைத்ர மாதம் எனப்படும் சித்திரை மாதத்தை ஒட்டி கொண்டாடப்படும் உற்சவம்தான் வசந்த உற்சவம். பங்குனி மாத அமாவாசை கழிந்தவுடன் சித்திரை மாதம் பிறந்து விட்டதாகப் பொருள்.

சித்திரை வைகாசி ஆகிய இரண்டு மாதங்களை வசந்த ருது என்று சொல்வார்கள். காலங்களில் நான் வசந்தம் என்று கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறான், இளவேனில் காலமான வசந்த காலத்தில் கொண்டாடப்படும் உற்சவம் என்பதால் இதனை வசந்த உற்சவம் என்பார்கள்.இதற்கு முன்னதாக ஸ்ரீபத்மாவதி தாயாருக்கும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கும் பர்ணய உற்சவம் (திருமண) நடைபெறும். அது முடிந்ததும் வசந்தோற்சவம் தொடங்கும்.

இந்த வசந்த உற்சவத்தின் மிக முக்கியமான விஷயம், நறுமண மலர்களால் வேயப்பட்ட வசந்த மண்டபத்தில், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாரோடு மலையப்ப சுவாமிக்கு தங்க ஆஸ்தானத்தில், பரிமளங்களால் தயார் செய்யப்பட்ட நீரில் புனித நீராட்டம் நடக்கும்.இது வசந்த காலம் என்றாலும் கோடை வெயில் அதிகமாக இருக்கும். எனவே சுவாமிக்கு குளிர்ச்சியாக ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இதற்கென்று திருமலை கோயில் வளாகத்திற்கு வெளியே வசந்த மண்டபத்தில் 800 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உற்சவம் தொடங்கி நடந்துவருகிறது. கிபி 1460களில் ஆண்ட அச்சுதராயன் என்கின்ற மன்னன் இதற்கென்று தனியாக நிதி அளித்ததாக கல்வெட்டுச் சான்றுகள் இருக்கின்றன.

இந்த உற்சவம் நடத்துவதற்காக வென்றே வசந்த மண்டபம் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது. 2006ம் ஆண்டுக்கு முன்னால் இந்த மண்டபத்தில் தான் மலையப்ப சுவாமி எழுந்தருளி மூன்று நாட்கள் வசந்த உற்சவத்தை கண்டருள்வார். ஆனால் 2006 ஆம் ஆண்டு கோயில் சுற்றுப்புறச் சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக இந்த வசந்த மண்டபம் இடிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட மண்டபம் இப்பொழுது பிரதான கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.

இந்த மண்டபம் அழகான தோரணங்கள் கட்டப்பட்டு நறுமண மலர்களால் அலங்காரம் செய்யப்படும், இளநீர் குலைகளும், வாழை மரங்களும் கட்டி பசுமையாக அலங்கரிக்கப்படும். இந்த மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1200 பேர் தங்கி உற்சவத்தைக் கண்டுகளிக்க முடியும். இதனுடைய துவக்க பூஜை அங்குரார்ப்பணம் என்று சொல்லப்படும். ஒன்பது வகையான தானியங்களை மண்ணில் விதைப்பார்கள்.

வசந்த உற்சவ விழா தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு சுத்திகரிப்பு சடங்குகள் என்று சொல்லப்படும் புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெறும். ஸ்ரீமலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாரோடு, மேற்கு மாட விதி வழியாக வசந்த மண்டபத்திற்கு ஊர்வலமாக எழுந்தருள்வார். இதற்கென்று தங்க ஆஸ்தானம் போடப்பட்டிருக்கும். வசந்த மண்டபம் முழுவதும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சைநிற மலர்களாலும் இலைகளாலும் நறுமணம் மிக்க பல்வேறு பொருள்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். திராட்சை, ஆப்பிள், எலுமிச்சை, வாழைப்பழம், அன்னாசி என பல்வகை கனிகளால் விதானம் அமைக்கப்பட்டிருக்கும். எங்கும் அற்புதமான நறுமணம் கமழும்.

எங்கு பார்த்தாலும் பசுமை. மலையின் சிகரங்களைத் தொடும் நீலவானம். அங்கங்கே கொட்டும் நீர் அருவிகள். எம்பெருமான் இயற்கைக்கு மிக அணுக்கமாக இந்த உற்சவத்தைக் கொண்டாடிக் கொண்டிருப்பார். அழகியல் உணர்வும், அற்புதமான இயற்கை சூழலும் நம் கண்ணுக்கும், மனதிற்கும் விருந்தாகும்.இச்சூழலில் சின்ன ஜீயர், பெரிய ஜீயர் மற்றும் அத்தியாபக கோஷ்டிகள் கூடியிருக்க, பரிமள ஸ்நானம் என சொல்லப்படும் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறும். அர்ச்சகர்களும் வேத பண்டிதர்களும் இணைந்து புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம் முதலிய வேத மந்திரங்களை ஓதுவார்கள். உபநிடதங்கள் ஓதப்படும். பெரியாழ்வாரின் நீராட்ட பாசுரம் சேவிக்கப்படும்.

அதற்குப் பிறகு ஸ்ரீமலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாருக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டு, நட்சத்திர ஹாரத்தியும் கும்ப ஹாரத்தியும் எடுக்கப்படும். பிறகு புண்ணியாவாசனம் செய்யப்பட்ட கும்பத்தில் இருக்கக்கூடிய புனித நீர் சகஸ்ரதாரா எனப்படும் ஆயிரம் கண்ணுள்ள தங்க சல்லடையின் வழியே புனித அபிஷேகம் செய்யப்படும். இதற்குப் பின் உற்சவமூர்த்திகள் அலங்காரம் முடிந்து, மாட வீதிகள் வழியாக திருவீதி வலம் நடக்கும். ஊர்வலம் ஸ்ரீராமானுஜர் சந்நதியை அடைய, அங்கு ஆஸ்தானம் நித்ய உற்சவம் ஆகி, தங்க வாசலை அடைந்து, அங்கே உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். மங்கள வாத்தியங்களோடு அன்னமாச்சாரியாவினுடைய கீர்த்தனைகளும் இசைக்கப்படும். பின் ஆஸ்தானம் சேருவார்.

இரண்டாம் நாள் வசந்த உற்சவத்தின் போது தங்க ரதத்தில், நான்கு மாடவீதிகளில் வலம் வருவார். முதல் நாளைப் போலவே சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்று, மாட வீதிகள் வழியாக ஆஸ்தானத்தை அடைவார். மூன்றாவது நாளான நிறைவு நாளில், சீதா சமேத ஸ்ரீராமர், லட்சுமணன், அனுமன், ருக்மணி தேவி சமேத கிருஷ்ணருடைய உற்சவ மூர்த்திகளும் எழுந்தருளச் செய்யப்படும். மூன்று விதமான ஆஸ்தானங்கள் போடப்பட்டிருக்கும். இந்து மதத்தினுடைய நான்கு பெரிய யுகங்கள் சத்ய யுகம், திரேதா யுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம். சத்தியயுகம் 4000 தெய்வீக ஆண்டுகள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. திரேதாயுகம் 3000 துவாபரயுகம் 2000 ஆண்டுகளும் கலியுகம் ஆயிரம் தெய்வீக ஆண்டுகளும் நீடிக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. (ஒரு தெய்வீக ஆண்டு என்பது 4,32,000 மனித ஆண்டுகளுக்கு சமம்.)

திரேதா யுகத்தில் மக்கள் மிகச்சிறந்த நீதி உள்ளவர்களாகவும் தார்மீக வாழ்க்கை முறைகளை பின்பற்றியவர்களாகவும் இருந்தனர். திரேதா யுக நாயகன் ஆன ராமன். திரேதா யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக சீதா ராம லட்சுமணர்கள் அனுமனுடன் ஒரு ஆஸ்தானத்தில் இருப்பார்கள்.துவாபர யுகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த பகவான் ருக்மணி சமேத கிருஷ்ணர் தனி ஆஸ்தானத்தில் இருப்பார்.கலியுகத்தின் பிரதிநிதியாக, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான மலையப்ப சுவாமி தங்க ஆஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவியோடு எழுந்தருளி இருப்பார். இந்த மூன்று யுக நாயகர்களுக்கும் வசந்த மண்டபத்தில், ஏக காலத்தில் புனித நீராட்டம் நடைபெறும். அதற்குப் பிறகு அலங் காரம் முடிந்து, திருவீதி வலம் நடைபெறும். மாட வீதிகளின் வழியாக அனைவருக்கும் காட்சி தந்து, ஸ்ரீராமானுஜரின் சந்நதி முன் எழுந்தருள அவர்களுக்கு ஆஸ்தானம் மற்றும் நித்ய உற்சவம் செய்யப்படும்.

இப்படிப்பட்ட சிறப்பான இந்த உற்சவம் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி தொடங்கு கிறது. அன்றைய தினம் மதியம் 2 மணி அளவில் ஸ்ரீபூதேவி சமேதஸ்ரீமலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று. மாலை திருவீதி புறப்பாடு நடைபெறும். ஏப்ரல் நான்காம் தேதி செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஸ்வர்ண ரத உற்சவம் நடைபெறும். மதியம் ஸ்தபன திருமஞ்சனம்.

மாலை திருவீதி புறப்பாடு நடைபெறும். அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை வசந்த உற்சவம் நடைபெறும். மதியம் இரண்டு மணி அளவில் ஸ்ரீராமர் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீமலையப்ப சுவாமிக்கு ஏககாலத்தில் திருமஞ்சனம் நடைபெற்று திருவீதி புறப்பாடு நடைபெறும். அதற்கடுத்த நாள் பௌர்ணமியாக இருப்பதால் ஸ்ரீமலையப்ப சுவாமிக்கு பௌர்ணமி கருட சேவை நடைபெறும்.இத்தனைச் சேவைகளையும் கண்டு எம்பெருமானின் கருணையைப் பெறுவோம் வாருங்கள்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

The post திருமலை திருப்பதியில் வண்ண மயமான வசந்தோற்சவம் appeared first on Dinakaran.

Tags : Kunkumum Spiritual ,Tirumalaya ,
× RELATED தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி...