×

ஒரு பெண்ணின் ஆசை உலகங்களின் தொகுப்புதான் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’

சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகள் தவிர பல்வேறு விழாக்களில் 350க்கும் அதிகமான விருதுகளைக் குவித்திருக்கும் ஆங்கிலப்படம் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’. ‘சோனி லிவ்’வில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒவ்வொரு விதமான இயலாமையும், ஏதோ ஒரு வகையில் அவளது ஆசைகள், கற்பனைகள் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கும். அப்படியான தன்னிலைத் தேடலில்தான் தவிக்கும் எவ்லின் என்னும் பெண்ணின் கதைதான் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’. சமீபத்திய ஆஸ்கர் விருது விழாப் பட்டியலில் 11 ஆஸ்கர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டு ஏழு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து தன் கணவன் வேமண்ட்டுடன் இணைந்து சலவைத் தொழில் செய்துவருகிறாள் எவ்லின். நிற்க நேரம் இல்லாமல், குடும்பத்தினருடனும் ரிலாக்ஸாக பேச முடியாமல் எப்பொழுதும் காலில் சக்கரம் கட்டியது போல் பரபரப்பாக இருக்கிறாள் எவ்லின்.

இவர்களின் மகள் ஜாய், தன்பால் உறவில் இருக்கிறாள். அதை எவ்லினால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் அம்மாவுக்கும் மகளுக்கும் சண்டை. இந்நிலையில் ஆடிட்டிங் சம்பந்தமாக வருமான வரித்துறை அதிகாரியைச் சந்திக்க தனது அப்பா மற்றும் கணவனுடன் செல்கிறாள் எவ்லின். அங்கே சட்டென ஆல்பாவெர்ஸ் எனும் இன்னொரு பிரபஞ்சத்துக்கு ஜம்ப் ஆகிறார் வேமண்ட். வெவ்வேறு பிரபஞ்சத்தில் வெவ்வேறு ஆளாக இருக்கிறார் வேமண்ட். இதுபோலவே எவ்லினும் அங்கே பல கேரக்டர்களில் வலம் வருகிறார். இந்த பலவகையான பிரபஞ்சங்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறாள் ஜோபு துப்பாக்கி. அதாவது எவ்லினின் மகள்! இந்த ஒவ்வொரு பிரபஞ்சமும் எவ்லினின் ஆசைகள்; கனவுகள். அந்த பிரபஞ்சங்களில் எல்லாம் தொழில் ரீதியான கஸ்டமர்கள் முதல் அவள் சந்தித்த அனைவரும் எவ்லினின் ஆசை, லட்சியம், செயல்களை எல்லாம் முடக்க, தடுக்க முற்படும் வில்லன்களாகத் தோன்றுகிறார்கள்.

இறுதியில், நிஜ உலகில் எவ்லினின் கணவன், ‘எல்லோருக்குள்ளும் இருக்கும் நல்ல இயல்பைப்பார்… வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்… இங்கே யாரும் கெட்டவர்கள் இல்லை… ’ என்கிறான். அதுபோலவே எவ்லின் பார்க்கத் தொடங்க, இதுவரை அவள் சஞ்சரித்த உலகங்கள் அனைத்தும் வண்ணமயமாக மாறுகின்றன. அந்தந்த உலகங்களில் வில்லன்களாக வந்தவர்கள் எல்லாம் நல்ல நண்பர்களாகத் தோன்றுகிறார்கள். தன் மகளின் உணர்வையும் இயல்பானதே என ஏற்கிறாள் எவ்லின். தத்துவ ரீதியான விஷயத்தை செல்லுலாய்டில் அட்டகாசமான படமாக எடுத்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள். எவ்லினாக பட்டையைக் கிளப்பி ஆஸ்கரைத் தட்டியிருக்கிறார் மிசேல் யோ. படத்தின் இயக்குநர்கள் டேனியல் கிவான் மற்றும் டேனியல்ஸ்கினெர்ட். நிச்சயம் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையுடன் இணைத்துப் பார்க்கக் கூடிய பல தருணங்கள் இந்தப் படத்தில் காணலாம்.

சக்திவேல்

The post ஒரு பெண்ணின் ஆசை உலகங்களின் தொகுப்புதான் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ appeared first on Dinakaran.

Tags :
× RELATED மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜக...