×

அரசை விமர்சித்தார்கள் என்ற காரணம் மட்டுமே செய்தி நிறுவனத்தை முடக்க போதுமானது கிடையாது :உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

புதுடெல்லி:கேரளாவின் மீடியாஒன் டிவி சேனல் ஒளிபரப்பை ஒன்றிய அரசு தடை செய்த நிலையில், அந்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும் ஊடக சுதந்திரம் குறித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து ஒளிபரப்பப்பட்டு வந்த மீடியாஒன் டிவி சேனல், சட்டவிதிகளுக்கு முரணாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து தேசிய பாதுகாப்பு காரணங்களை கூறி கடந்த ஜனவரி 31ம் தேதி ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஒளிபரப்புக்கு தடை விதித்தது.

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தடை உத்தரவை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில், மீடியாஒன் டிவி சேனல் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. மேற்கண்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், டிவி சேனல் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. கேரள உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மீடியாஒன் டிவி சேனல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று இம்மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தேசிய பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் சார்பில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்வதில் நிறைய வழிமுறைகள் உள்ளன. இந்த விவகாரத்தில் விதிமீறல் ெதாடர்பான புகாரை ஒன்றிய அரசு நிரூபிக்க வேண்டும். அதன்பின் முடிவு செய்ய வேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திடம் உள்ளது. எனவே மீடியாஒன் டிவி சேனல் மீதான தடையை ரத்து செய்கிறோம். கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.

ஜனநாயக நாட்டில் பத்திரிகை, ஊடக சுதந்திரத்தின் பங்கு முக்கியமானது. மீடியாஒன் டிவி சேனல் மீது விதிக்கப்பட்ட தடைக்கான காரணத்தை, ஒன்றிய அரசு தெரிவிக்காததை நியாயப்படுத்த முடியாது. தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தடைக்கான காரணத்தை வெளியிடாதது ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு உள்ளது. அரசை விமர்சிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூற முடியாது. வலுவான ஜனநாயகத்திற்கு ஊடக சுதந்திரம் அவசியம். ஒன்றிய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், அடுத்த நான்கு வாரங்களுக்குள் மீடியாஒன் டிவி சேனலுக்கான புதுப்பித்தல் உரிமத்தை வழங்க வேண்டும். அதுவரை உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு தொடர அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, அந்த டிவி சேனல் மீண்டும் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post அரசை விமர்சித்தார்கள் என்ற காரணம் மட்டுமே செய்தி நிறுவனத்தை முடக்க போதுமானது கிடையாது :உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,MediaOne TV ,Kerla ,Union government ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு