×

ஜமுனாமரத்தூர் அடுத்த கோவிலூர் மலை கிராமத்தில் 10ம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டுகள் கண்டெடுப்பு: சிவன் கோயிலில் விளக்கேற்ற பயன்பட்டது

திருவண்ணாமலை: ஜமுனாமரத்தூர் பகுதியில் சிவன் கோயிலில் விளக்கேற்றுவதற்கான, எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 10ம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் தாலுகா, கோவிலூர் பகுதியில் கல்வெட்டுகள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த ச.பாலமுருகன், மதன்மோகன், தர், பழனிச்சாமி, நந்தகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு நடத்தினர்.அப்போது, கோவிலூர் கிராமத்தில் உள்ள திருமூலநாதர் சிவன் கோயிலில் வரலாற்று சிறப்புமிக்க அரிய பல கல்வெட்டுகள் இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த கோயிலுக்கு அருகே 3 செக்கு கல்வெட்டுகளும், 2 நடுகற்களும் கண்டெடுக்கப்பட்டன. இவை, 10ம் நூற்றாண்டை சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் தாசில்தார் ச.பாலமுருகன் தெரிவித்ததாவது:கோவிலூரில் கண்டெடுக்கப்பட்ட 2 செக்கு கல்வெட்டில் பதிந்துள்ள எழுத்துக்களின் அடிப்படையில் அவை 10ம் நூற்றாண்டை சேர்ந்தது என உறுதி செய்ய முடிகிறது. இந்த கல்வெட்டில், பரதன் என்பவர் மகன் இச்செக்கை செய்து அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதே பகுதியில் உள்ள மற்றொரு செக்கில் உள்ள எழுத்துக்கள் படிக்க இயலாத அளவில் தேய்மானம் அடைந்துள்ளது. எனவே, செக்கு செய்து அளித்தவரின் பெயர் குறிப்பிட்டிருக்க வாய்ப்பு உள்ளது.மேலும், இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 2 நடுகற்களில் ஒன்று உடைந்தும் மற்றொன்று சாய்ந்தும் உள்ளது. நல்ல நிலையில் உள்ள நடுகல்லில், கல்வெட்டு படிக்க முடியாத அளவிற்கு தேய்மானம் அடைந்துள்ளது. அதன் காலமும் 10 அல்லது 11ம் நூற்றாண்டாக இருக்கலாம். இந்த செக்குகள் மூலம், அந்த காலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டிற்கும், கோயில் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, திருமூலநாதர் சிவன் கோயிலும் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பதை இதன் மூலம் உறுதி செய்ய முடிகிறது.மேலும், கோவிலூர் சிவன் கோயில் அருகே ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட புலிகுத்திப்பட்டான் நடுகல்லில் மங்கல பரதன் மகன் வில்லி என்பவர் இறந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பரதன் என்ற பெயர் இந்த செக்கு கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ளது. எனவே, பரதன் என்ற வம்சா வழியை  சேர்ந்தவர்கள் ஆளுகையின் கீழ் இப்பகுதி இருந்தது என அறிய முடிகிறது. எனவே, இதுதொடர்பாக ஆய்வு நடத்தினால் அரிய தகவல்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post ஜமுனாமரத்தூர் அடுத்த கோவிலூர் மலை கிராமத்தில் 10ம் நூற்றாண்டு செக்கு கல்வெட்டுகள் கண்டெடுப்பு: சிவன் கோயிலில் விளக்கேற்ற பயன்பட்டது appeared first on Dinakaran.

Tags : Govilur ,Jamunamarathur ,Shiva Temple ,Tiruvannamalai ,Thiruvanamalai ,Govilur Mountain Village ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...