துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கால்பந்து அணி, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளுடன் நட்பு அடிப்படையிலான சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்கிறது. துபாயில் நடந்த ஆட்டத்தில் துனிசியாவை எதிர்கொண்டது இந்தியா. 8 வது நிமிடத்திலேயே துனிசியாவுக்கு கிடைத்த ‘ப்ரீ கிக்’ வாய்ப்பை ஹூயிஜ் கோலாக மாற்றினார். இந்திய அணிக்கு கிடைத்த பல வாய்ப்புகள் அடுத்தடுத்து வீணாகின. இந்திய வீராங்கனைகள் மனிஷா, சஞ்சு, மரியம் ஆகியோரின் கோல் முயிற்சிகள் பலனளிக்கவில்லை. தமிழக வீராங்கனை இந்துமதிக்கு கோல் பகுதியில் இருந்து கோலடிக்கும் வாய்ப்பு தவறிப்போனது. தொடர்ந்து 40வது நிமிடத்தில் கிடைத்த ‘ப்ரீ கிக்’ வாய்ப்பை மோனிஷா வீணடித்தார். மீண்டும் இந்துமதிக்கு கிடைத்த வாய்ப்பும் பலனளிக்கவில்லை. இப்படி கார்னர், பெனால்டி வாய்ப்புகள் என இந்தியாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆட்டம் முழுவதும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் கோலடிக்க முடியவில்லை. விறுவிறுப்பான இப்போட்டியில், துனிசியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. சனிக்கிழமை அமீரகத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. சர்வதேச தரவரிசையில் இந்தியா 57வது இடத்திலும், துனிசியா 77வது இடத்திலும் இருக்கின்றன. இந்தியா அடுத்து அக்.10ல் பஹ்ரைன், அக்.13ல் சீன தைபேவுடன் மோதுகிறது….
The post மகளிர் கால்பந்து துனிசியாவிடம் தோற்றது இந்தியா appeared first on Dinakaran.