×

ராஜஸ்தானை வென்று பிளேஆப் வாய்ப்பில் நீடிக்கும் மும்பை: லீக் சுற்றில் கடைசி போட்டியில் ஆடுவது எங்களுக்கு சாதகம்: ரோகித் சர்மா

சார்ஜா: ஐபிஎல் தொடரில் சார்ஜாவில் நேற்று நடந்த 51வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ரன் எடுத்தது. அதிகபட்சமாக லீவிஸ் 24, டேவிட் மில்லர் 15 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். மும்பை தரப்பில் நாதன் கோல்டர் நைல் 4, ஜேம்ஸ் நீஷம் 3, பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினர்.பின்னர் களம் இறங்கிய மும்பை அணி 8.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 94 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேப்டன் ரோகித்சர்மா 22, சூர்யகுமார் யாதவ் 13 ரன்னில் ஆட்டம் இழந்தனர். இஷான் கிஷன் ஆட்டம் இழக்காமல் 25 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50, ஹர்த்திக் பாண்டியா 5 ரன் அடித்தனர். 13வது போட்டியில் 5வது வெற்றியுடன் 5வது இடத்திற்கு முன்னேறிய மும்பை பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. 4 ஓவரில் 14 ரன் மட்டுமே கொடுத்து 4 விக்கெட் வீழத்திய கோல்டர் நைல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.வெற்றிக்கு பின் மும்பை கேப்டன் ரோகித்சர்மா அளித்த பேட்டி: நாங்கள் இங்கு வந்து (சார்ஜா) செய்ய வேண்டியதை செய்தோம். அதாவது இரண்டு புள்ளிகளைப் பெற, எதிரணியை 90 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தவுடன், போட்டியை முன்கூட்டியே முடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது எங்கள் ரன் வீதத்தையும் மேம்படுத்த ஒரு வாய்ப்பு. 2 போட்டிக்கு பின் இஷான் கிஷன் ஆடுவதால் அவருக்கு நேரம் கொடுக்க முதலில் நான் ரிஸ்க் எடுத்தேன். சிறிது நேரம் களத்தில் இருந்த பின்னர் அவர் தனது ஷாட்களை ஆடினார். அனைத்து பந்துவீச்சாளர்களும் ஒன்றாக வந்து நிலைமைகளை நன்றாக பயன்படுத்தினர். 8 அணிகளும் ஒவ்வொரு அணியையும் தோற்கடிக்கும் திறன் கொண்டவை. அதனால் ஐதராபாத்தை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், கே.கே.ஆர் எங்களுக்கு முன்னால் விளையாடுகிறது. எனவே கடைசி போட்டியில் என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியும், என்றார்.ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் கூறுகையில, இங்கு பேட்டிங் செய்வது சற்று சவாலான பிட்ச். முதல் இன்னிங்ஸில் இது கடினமாக இருந்தது. அபுதாபியில் இருந்து வந்து, ஷார்ஜாவில் விளையாடுவது மிகப்பெரிய வித்தியாசம். பேட்ஸ்மேன்களை அதிகம் குறை கூற முடியாது, ஆனால் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. ஆனால் 2வது இன்னிங்சில் பேட்டிங்கிற்கு சற்று உதவியது. நாங்கள் சிறிது நேரம் ஒதுக்கி அடுத்த ஆட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டும். அடுத்த ஆட்டத்தில் கண்டிப்பாக ஒரு சிறந்த கிரிக்கெட் ஆட விரும்புகிறோம், என்றார்.மும்பையா, கொல்கத்தாவா?டெல்லி, சென்னை, பெங்களூரு அணிகள் பிளேஆப்சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் 4வது அணி கொல்கத்தாவா, மும்பையா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இரு அணிகளும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன் ரேட்டில் கொல்கத்தா முன்னிலையில் உள்ளது. கொல்கத்தா கடைசி லீக் போட்டியில் நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது. மும்பை கடைசி போட்டியில் வரும் 8ம் தேதி ஐதராபாத்துடன் மோதுகிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி பிளே ஆப் வாய்ப்பு பெறும். 2 அணிகளும் தோற்கும் பட்சத்தில் கொல்கத்தா, ராஜஸ்தான், மும்பை, மற்றும் சென்னையை நாளை பஞ்சாப் வீழ்த்தினால் 4 அணிகளும் தலா 12 புள்ளிகளுடன் இருக்கும். அப்படி இருந்தால் ரன்ரேட் அடிப்படையில் கேகேஆருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இருப்பினும் கேகேஆர் அல்லது மும்பைக்கு தான் வாய்ப்பு அதிகம் உள்ளது. கேகேஆருக்கு பின் கடைசி போட்டியில் மும்பை விளையாடுவதால் ரன்ரேட்டிற்கு தகுந்தபடி ஆடும் சாதகம் உள்ளது….

The post ராஜஸ்தானை வென்று பிளேஆப் வாய்ப்பில் நீடிக்கும் மும்பை: லீக் சுற்றில் கடைசி போட்டியில் ஆடுவது எங்களுக்கு சாதகம்: ரோகித் சர்மா appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Rajasthan ,Playoff ,Rohit Sharma ,Charjah ,Mumbai Indians ,Rajasthan Royals ,India ,IPL ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தின் 2-வது...