- BNP பேரீஃபா திறந்த
- எம்மா அதிர்ச்சி
- யுஎஸ் ஓபன்
- எம்மா ரட்டுகானு
- அமெரிக்கா
- பிஎன்பி பாரிபா ஓப்பன்
- எம்மா
- தின மலர்
இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரில், யுஎஸ் ஓபன் சாம்பியன் எம்மா ரடுகானு அதிர்ச்சி தோல்வியடைந்தார். அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு (18 வயது, 22வது ரேங்க்) நேரடியாக களமிறங்கினார். அவருடன் பெலாரஸ் வீராங்கனை அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச் (25 வயது, 100வது ரேங்க்) மோதினார். யுஎஸ் ஓபன் போட்டிக்கு பிறகு எம்மா களமிறங்கும் முதல் ஆட்டம் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக ஆரம்பம் முதலே சாஸ்னோவிச் அசத்தலாக விளையாடி புள்ளிகளைக் குவித்தார். அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் எம்மா தடுமாறினார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாஸ்னோவிச் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2வது செட்டில் எம்மா ஓரளவு தாக்குப்பிடித்தாலும், உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஸ்னோவிச் 6-2, 6-4 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. முதல் சுற்றிலும் தன்னை விட முன்னணி வீராங்கனையான கொலம்பியாவைச் சேர்ந்த மரியா ஒசோரியாவை (19 வயது, 71வது ரேங்க்) சாஸ்னோவிச் வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் 3வது சுற்றில் முன்னணி வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலெப்புடன் (30வயது , 17வது ரேங்க்) சாஸ்னோவிச் மோதுகிறார். மற்றொரு 2வது சுற்றில், யுஎஸ் ஓபனில் ரடுகானுவிடம் தோற்று 2வது இடம் பிடித்த லெய்லா பெர்ணாண்டஸ் (கனடா) 6-2, 6-3 என்ற நேர் செட்களில் ஆலிஸ் கார்னெட்டை (பிரான்ஸ்) வீழ்த்தினார். முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (போலந்து), ஜெலனா ஆஸ்டபென்கோ (லாத்வியா), எலனா ஸ்விடோலினா (உக்ரைன்), அனஸ்டேசியா பவுலிசெங்கோவா (ரஷ்யா), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு), யுலியா புடின்ட்சேவா (கஜகிஸ்தான்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்….
The post பிஎன்பி பாரிபா ஓபன்: எம்மா அதிர்ச்சி தோல்வி appeared first on Dinakaran.