திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் என 25 உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில் 59.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 3வது வார்டு, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உள்பட்ட 1வது வார்டு, சோழவரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட 15 மற்றும் 18வது வார்டு ஆகிய 4 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிகள், தாமனேரி, கொசவன்பாளையம், ஆலடு, திருவெள்ளவாயல் ஆகிய 4 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகள் மற்றும் 47 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 30 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் 4 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 33 பேர், 4 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 13 பேர், 17 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 47 பேர் என மொத்தம் 63 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மட்டும் வாக்களிக்க வேண்டிய ஆண் வாக்காளர்கள் – 23555, பெண் வாக்காளர்கள் – 24539, இதர வாக்காளர்கள் 11 என மொத்தம் 48105 வாக்களர்கள் ஆகும். இதற்காக மொத்தம் 81 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் தலா 5 பேர் வீதம் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இத்தேர்தலில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி ஆர்வத்துடன் வாக்களித்தனர். உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ேபசியதாவது, `. இந்த தேர்தலில் 59.45 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. பதிவாகும் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டு சென்று அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் அமைத்துள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என தெரிவித்தார்….
The post திருவள்ளூர் மாவட்டத்தில் 25 உள்ளாட்சி பதவிகளுக்கு 59.45 சதவீதம் வாக்குப்பதிவு appeared first on Dinakaran.