×

சம்பா, தாளடி பயிரில் குருத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா, தாளடி பயிரில் குருத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கமளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் 20 முதல் 25 நாள் பயிராக உள்ளது. தூர்கட்டும் இத்தருணத்தில் குருத்துப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக தென்படுகிறது. சிஆர் 1009, கோ51, திருச்சி 3, கோ.ஆர் 50, ஆடுதுறை 42, பிபிஎஸ் 5, எம் டி யு 70 29, பிபிடி ஐ ஆர் 20 முதலிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சிஆர்1009, ஆடுதுறை 51 முதலிய ரகங்கள் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் விதைப்பு செய்துள்ள விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி களை எடுத்த பின் முதல் உரம் ஏக்கருக்கு டிஏபி ஒரு மூட்டை யூரியா, அரை மூட்டை பொட்டாஷ், அரை மூட்டை என்ற அளவில் விடுகின்றனர். உரமிட்ட உடன் பயிர்கள் துரிதமாக பச்சை பிடித்து வளர்வதால் சாறு உறிஞ்சும் பூச்சி, இலைப்பேன் தாக்குதல் தென்படுகிறது என்றாலும் மழையால் குறைந்துவிட்டது. ஆனால் குருத்துப் பூச்சியின் தாக்குதல் அதிகமாக உள்ளது. தற்போதைய தட்பவெட்ப சூழ்நிலையாலும் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் குருத்துப் பூச்சி தாக்குதல் அதிகமாகி வருகிறது. எனவே குருத்துப் பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும்.வயலில் விளக்குப் பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும், ஒரு ஏக்கருக்கு 20 கிலோவுக்கு மேல் யூரியா இடக்கூடாது. இயற்கையாகவே தழை, மணி, சாம்பல் சத்துக்களை கொடுக்கும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ், பாக்டீரியா ஆகியவற்றை தலா அரை லிட்டர் வீதம் ஏக்கருக்கு மணலுடன் அல்லது தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். வாய்ப்புள்ளவர்கள் கைத்தெளிப்பான் கொண்டு ஆரம்பநிலையில் பூச்சிகளை கட்டுப்படுத்த எதிர் உயிரிகள் ஆன பிரியா பேசியானா மற்றும் அனிஷா பிளே ஆகியவற்றை ஏக்கருக்கு அரை கிலோ வீதம் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஐந்து இடங்களில் பறவைகள் குடில் அமைக்க வேண்டும், குறுத்து பூச்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈடுசெய்ய அதிக தூர்கள் வெடிக்க செய்வதற்கு ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டம் இட வேண்டும். உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்டம் ஆகியவை வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்….

The post சம்பா, தாளடி பயிரில் குருத்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் உதவி இயக்குனர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruthirapundi ,Thiruthirupupundi ,Thiruvarur District ,
× RELATED புளியங்குடியில் பரிதாபம் டிராக்டர் மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி