×

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டம்

கோவில்பட்டி, மார்ச் 28: கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரம் கிராம மக்கள் ஆதித்தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தென் மண்டல செயலாளர் நம்பிராஜ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன், மாவட்டத் துணைச் செயலாளர் முத்துசாமி, மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த மாயாண்டி, கருப்பசாமி, சந்திரசேகரன் மற்றும் கிராம மக்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணனிடம் அளித்த மனுவில், ‘எட்டயபுரம் வட்டத்துக்குட்பட்ட மேலநம்பியாபுரம் கிராமத்தில், அருந்ததியர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் மற்றும் மயானத்துக்கு செல்லும் பாதையை, அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, குடிசை அமைத்துள்ளனர். இதனால், அருந்ததியர் சமூக மக்கள் தெருவை விட்டு வெளியே செல்ல பாதை இல்லாத சூழ்நிலை உள்ளது. இது தொடர்பாக ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஏற்கனவே கடந்த ஆண்டு கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவுக்கு கடந்த டிசம்பர் மாதம் பதில் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஆக்கிரமிப்பு இருப்பினும் அகற்றி அருந்ததியர் மக்களுக்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டுமென எட்டயபுரம் வட்ட நிர்வாகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

ஆனால் எட்டயபுரம் வட்டாட்சியர், இந்த ஆக்கிரமிப்பு சார்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதப்படுத்துவதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உள்ளது. எனவே ஆக்கிரமிப்பு அகற்றாமல் காலதாமதப்படுத்தும் எட்டயபுரம் வட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஆக்கிரமிப்பை உடனே அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன், ஏற்கனவே எட்டயபுரம் வட்டாட்சியர் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்ற ஏழு நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தெரிவித்தார். அப்போது மேல நம்பிபுரம் கிராம மக்கள் 7 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags : Kovilpatti Kotakshiar ,
× RELATED கோவில்பட்டி கோட்டாட்சியர்...