×

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கழுகுமலை, மார்ச் 28: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 4ம் தேதி நடக்கிறது. கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்தாண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. 6,30மணிக்கு மேல் அரோஹரா கோஷம் முழங்க கொடியேற்றி மகா தீபாராதனை நடந்தது.

பின்னர் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானைக்கும், சோமாஸ்கந்தர் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகளும் தீபாராதனையும் நடந்தது. கொடியேற்றத்தில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பிரதோஷ குழு தலைவர் முருகன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 8மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி விதியுலா வந்தார்.  2ம் திருநாளான இன்று பூத வாகனத்திலும், 3ம் திருநாளான நாளை (29ம் தேதி) அன்னவாகனத்திலும், 4ம் திருநாளான (30ம் தேதி ) வெள்ளியானை வாகனத்திலும், 5ம் திருநாளான (31ம் தேதி) வெள்ளி மயில் வாகனத்திலும், 6ம் திருநாளான (1ம் தேதி) காளை வாகனத்தில் சோமாஸ் கந்தரும், ஆட்டுகிடா வாகனத்தில் கழுகாசலமூர்த்தியுடன் வள்ளி, தெய்வானை வீதியுலா வருதலும் நடக்கிறது.

7ம் திருநாளான (2ம் தேதி) மாலை 4மணிக்கு சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலி பூஜை, இரவு 8மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவப்பு மலர் சூடி சிவன் அம்சமாக (ருத்திரர்) வீதியுலா வருதலும், அதைத்தொடர்ந்து இரவு 12 மணிக்கு வெள்ளை மலர் சூடி அலங்காரம் செய்யப்பட்டு பிரம்மன் அம்சமாக வீதியுலா வருதலும் நடக்கிறது.19ம் தேதி அதிகாலை 6 மணிக்கு பச்சை மலர் சூடி திருமால் அம்சமாக கிரிவலமாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார், அன்று இரவு 7 மணிக்கு கைலாசபர்வத வாகனத்தில் வீதியுலா வருதலும் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9ம் திருநாளான ஏப்.4ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜை நடக்கிறது.

தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை மேற்கொள்ளப்படும். காலை 6 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளுகிறார். விநாயகப்பெருமாள் சட்ட ரதத்திலும்,  கழுகாசலமூர்த்தியுடன் வள்ளி, தெய்வானை சமேதரர்கள் ரதத்திலும் எழுந்தருளி 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு பவுர்ணமி கிரிவலமும் நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி முக்கிய வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 5ம் தேதி தீர்த்த வாரியும், இரவு 8மணிக்கு தபசு காட்சியும், 6ம் தேதி இரவு 7.35மணிக்கு திருக்கல்யாணமும், 7ம் தேதி இரவு 7 மணிக்கு பட்டிணப்பிரவேசம், 8ம் தேதி இரவு 7 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சீர்பாத தாங்கிகள் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.செய்து வருகின்றனர்.

Tags : Panguni Uthra festival ,Kalgakumalai Kalkasalamurthy temple ,
× RELATED பக்தர்கள் நேர்த்திகடன் தாராள அம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா