×

சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் பாஜ அரசு நிறுத்திவிட்டது திண்டுக்கல்லில் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சிறுபான்மையினர் வாழ்வியல் புரிந்துணர்வு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. சங்க மாநில தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகிக்க, மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா, மாநில துணை தலைவரும், திரைப்பட நடிகையுமான ரோகிணி முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்து எம்பி பொறுப்பை பறித்தது நாம் ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. ராகுல் காந்தி பிரதமருக்கும், அதானிக்கும் உள்ள நெருக்கம் சம்பந்தமாக ஆதாரங்களோடு பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்ற அனுமதி கேட்டார்.
.
ஆனால் அனுமதி கொடுத்தால் அவருடைய முகத்திரை மேலும் கிழியும் என்ற அச்சத்தில் அவர்கள் இந்த பதவி பறிப்பு செய்திருக்கிறார்கள். ஒன்றிய அமைச்சரவையில் ஒரு சிறுபான்மையினர் கூட இடம் பெறவில்லை. இது சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. பாஜ சிறுபான்மையினரை ஒதுக்கி வைப்பதை ஒரு அரசியல் கொள்கையாகவே வைத்துள்ளார்கள். பிஎச்டி, எம்பில் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வந்தது. ஆனால் இந்த ஆண்டு ஒன்றிய சிறுபான்மை அமைச்சராக உள்ள ஸ்மிருதிராணி அனைத்து கல்வி உதவி தொகைகளையும் நிறுத்திவிட்டார். சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் ஓடை அமைப்பதற்காக ஒரு சிறப்பு உட்கூறு திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டத்தையும் நிறுத்தி விட்டார்கள். சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை எல்லாம் ஒன்றிய பாஜ அரசு நிறுத்திவிட்டது. இவ்வாறு தெரிவித்தார்.


Tags : Peter Alphonse ,Dindigul ,BJP government ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...