சாத்தனூர் அணையில் இருந்து திறந்த தண்ணீர் கெலமஞ்சனூர் பிக்கப் அணைக்கட்டு வழியாக தென்பெண்ணை ஆற்றில் விவசாயத்திற்கு பெருக்கெடுத்து ஓடுகிறது. தொழிலாளியை வெட்டிக்கொன்ற சகோதரர்கள் சென்னையில் கைது

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் அருகே சிசிடிவி கேமரா பொருத்திய தகராறில் மண்பாண்ட தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டிக்கொன்ற சகோதரர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி(51), மண்பாண்ட தொழிலாளி. இவரது மனைவி சுசிலா(45). வேலுச்சாமிக்கும் எதிர்வீட்டை சேர்ந்த சாந்தி(45) என்பவருக்கும் பணப்பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வேலுச்சாமி, தனது வீட்டின் முன்புறம் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியை ஆட்களை வைத்து மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த சாந்தி, ‘என்னை கண்காணிப்பதற்காக கேமரா பொருத்துகிறாயா?' என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த வேலுச்சாமி, சாந்தியை மண்வெட்டியால் தாக்கினாராம். இதைக்கண்ட சாந்தியின் மகன்களான வேடியப்பன்(20), சந்தோஷ்(19) ஆகிய இருவரும் ஓடிவந்து வேலுச்சாமியிடம் இருந்த மண்வெட்டியை பறித்து அவரை சரமாரி மண்வெட்டியால் வெட்டினர். இதை தடுத்த வேலுச்சாமியின் மனைவி சுசீலா மற்றும் தாய் நாவம்மாள்(70) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது.

இதில் தலையில் படுகாயமடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் விரைந்து வந்து காயமடைந்த நாவம்மாள், சுசீலா மற்றும் சாந்தி ஆகிய மூன்று பேரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வேடியப்பன், சந்தோஷ் ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.

இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் சென்னையில் பதுங்கியிருப்பதாக தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் சென்னை விரைந்து சென்று வேடியப்பன் மற்றும் சந்தோஷை நேற்று அதிகாலை கைது செய்தனர். பின்னர், அவர்களை கீழ்பென்னாத்தூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: