×

பிரமோற்சவ தேர் திருவிழா கொடியேற்றம் வரும் 2ம் தேதி பிரமாண்ட தேரோட்டம் திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலில் நாளை

திருவலம், மார்ச்26: திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் பிரமோற்சவ தேர் திருவிழா கொடியேற்றம் நாளை காலை நடைபெறுகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் பொன்னையாற்றங்கரையில் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க தனுமத்யம்பாள் சமேத வில்வநாதீஸ்வரர் உள்ளது. இக்கோயில் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலமாகும்,கோயில் நந்தியம்பெருமான் மூலவர் சன்னதி முன்பு கிழக்கு நோக்கி புறம்காட்டி நிற்பது மற்றும் அம்மை அப்பனிடம் கனி வாங்கிய விநாயகருக்கு கோயில் வளாகத்தில் தனிசன்னதி போன்ற வரலாற்று சிறப்புகளை பெற்ற தலமாகும்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ தேர் திருவிழா, நடராஜபெருமான் உடனுறை சிவகாமியம்பாள் ஆருத்ரா தரிசனம், சித்தர் சிவானந்தா மவுனகுரு சாமிகளின் குருபூஜை விழா, மாதந்தோறும் பிரதோஷ வழிபாடுகள்.
பவுர்ணமி கிரிவலம், நாயன்மார்களின் திருமுறை மன்றங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டிற்கான கோயில் பிரமோற்சவ தேர் திருவிழாவையொட்டி மூலவர் சன்னதி முன்பு வீற்றிருக்கும் கொடி மரத்தில் நாளை (பங்குனி மாதம் 13ம்நாள்) காலை 10.15 முதல் 12.15 மணிக்குள்ளாக மிதுன லக்னத்தில் கோயில் தலைமை குருக்கள் செல்லப்பா தலைமையில் அர்ச்சகர்கள் குழுவினர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு மேளதாளத்துடன் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றுதல் நடைபெறுகிறது.

இதனைத்தொடர்ந்து நாளை முதல் நாள்தோறும் 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் உற்சவமூர்த்திகள் அன்னம், சிம்மம், பூதம், வெள்ளி ரிஷபம், மயில், கிளி போன்ற பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளின் வழியாக வலம் வருவதும், 7ம் நாள் ரத உற்சவமான தேர் திருவிழாவில் சிவபெருமான் ஒரு தேரிலும், மற்றொரு தேரான அம்மன் தேர் என 2 பெரிய தேர்களில் அலங்கரிக்கப்பட்டு மாடவீதிகளின் வழியாக வலம் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை கோயில் நிர்வாக அலுவலர் தே.திருநாவுக்கரசு, ஆய்வாளர் மா.சிவராமகிருஷ்ணன், பிரமோற்சவ திருவிழாகமிட்டியினர், திருவலம் மற்றும் கெம்பராஜபுரம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags : Pramotsava Chariot Festival Flag Hoisting ,Grand Chariot Race ,Thiruvalam Vilvanatheeswarar Temple ,
× RELATED வரும் 15ம் தேதி பிரமோற்சவ கொடியேற்றம்...