×

860 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்த கேபிள்கள் பதிக்கும் பணி கிராம சபாவில் கலெக்டர் முருகேஷ் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 23: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது என கிராம சபாவில் கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபா கூட்டங்களை நடத்த அரசு உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளிலும் நேற்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த பறையம்பட்டு ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில், கலெக்டர் பா.முருகேஷ் கலந்துகொண்டார். அப்போது, கலெக்டர் பேசியதாவது: கிராமத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடுவதற்காக கிராம சபா கூட்டம் நடத்தப்படுகிறது. கிராமத்துக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை, தெருவிளக்கு, மயானபாதை உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவது குறித்து கிராம மக்களின் கருத்துக்களை கேட்டு கிராம சபா கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. கிராம வளர்ச்சித் திட்டத்துக்கான கணக்ெகடுப்பு பணி தற்போது நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படும். அரசின் வீடு வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளையும் இப்பட்டியலில் இருந்துதான் தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, தகுதியுள்ள அனைவரும் இந்த கணக்ெகடுப்பில் விடுபடாத வகையில் இப்பணி நடைபெற வேண்டும். அதற்கு, அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.

மேலும், ஒருங்கிணைந்த அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், கடந்த 2021-2022ம் ஆண்டில் 169 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் 175 கிராமங்களும் வரும் நிதி ஆண்டில் 175 கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவையை ஏற்படுத்த அரசு ₹2 ஆயிரம் கோடி நிதியில் திட்டம் தீட்டியிருக்கிறது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 கிராமங்களிலும் அதற்கான கேபிள்கள் பதிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 12 ஒன்றியங்களில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இப்பணி முடிவடைந்தால், அதிக திறனில் இணைய சேவை கிடைக்கும். ஊராட்சி மன்ற தலைவருடன் முதல்வரே நேரடியாக தொடர்புகொண்டு ேபசும் வாய்ப்பு உருவாகும். பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டம் விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளன. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ₹ஆயிரம் வழங்கும் திட்டத்தில் யாராவது விடுபட்டிருந்தால் தகவல் அளிக்கலாம். பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தை திருமணங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில், வேளாண் கருவிகள், சுய உதவிக்குழு கடன், ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் த.ரமணன், ஊராட்சி உதவி இயக்குநர் சரண்யாதேவி, பிடிஓக்கள் பரமேஸ்வரன், மரியதேவானந்த், வேளாண் உதவி இயக்குநர் அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Collector ,Murugesh ,Tiruvannamalai ,
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!