×

சிப்காட் தொழில்பேட்டை அமைக்க மக்கள் ஆதரவு

மோகனூர், மார்ச் 23: பரளி, என்.புதுப்பட்டி, அரூர், வலையப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்க பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டம் பரளி, என்.புதுப்பட்டி மற்றும் வலையப்பட்டி ஊராட்சி பகுதியில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க, அரசு நிலம் எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இப்பகுதியை சாராத சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பரளி, என்.புதுப்பட்டி, அரூர் மற்றும் வலையப்பட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், தொழில் வளர்ச்சி பெறவும், வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தமிழக அரசு சிப்காட் தொழில்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்தும், இதனை விரைவில் அமைக்க, கிராம சபைக்கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.

மோகனூர் ஒன்றியம், கொமரிபாளையத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா தலைமையில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில், கொல்லிமலை திட்ட அலுவலர் பீட்டர் முன்னிலை வகித்தார். இதில் கங்காநாயக்கன்பட்டி, விட்டுரங்கன்பட்டி பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். மேல்நிலைத்தொட்டியிலிருந்து குடிநீர் எடுத்து விடும் பணியாளர்களுக்கு ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, கூட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் முருகேசன் மற்றும் பொதுமக்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அடிப்படை தேவைகளை செய்து தரக்கோரி மனு அளித்தனர். எஸ்.வாழவந்தியில் நடந்த கிராம சபை கூட்டம் சின்னகரசபாளையத்தில் நடந்தது. இதில் மணப்பள்ளி ஊராட்சிப்பகுதியில் இருந்து எஸ்.வாழவந்தி ஏரி வழியாக பல்வேறு பகுதிகளுக்கு புதிதாக நீரேற்று பாசனம் திட்டத்தின் மூலம், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்த திட்டத்தின் வாயிலாக எஸ்.வாழவந்தி ஏரியில் தண்ணீர் விட்டு நிரப்ப வேண்டும் என அப்பகுதி சேர்ந்த விவசாயிகள், ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்தனர்.

Tags : Chipcott Industrial Park ,
× RELATED பெரம்பலூர் அருகே எறையூரில் சிப்காட்...