×

பதிவு செய்து பயன்பெற அழைப்பு கோடியக்கரை அருகே பாலப்பணி மாற்றுப்பாதையை அகலப்படுத்தகோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல்


வேதாரண்யம்: கோடியக்கரை அருகே கழுங்குபாலத்தை இடித்து விட்டு புதியபாலம் கட்டுவதால் தற்காலிக மாற்றுப்பாதை குறுகலாக உள்ளதாக கூறி அதனை அகலப்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று பேருந்தை மறித்து மறியலில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை- கோடியக்காடு ஊராட்சிகள் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஊராட்சிகளிலும் சுமார் 9,000 பேர் வசித்து வருகின்றனர். தற்போது மீன்பிடி சீசன் காலம் என்பதால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கோடியக்காடு எல்லையில் கழுங்குபாலம் 1942ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இந்த பாலத்தை தற்போது உடைத்து விட்டு புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பாலப்பணிக்கு மாற்றுப்பாதை மிகச்சிறிய அளவில் நடைபாதை போடப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனம் மட்டுமே செல்ல முடிகிறது. இதனால் இந்த வழியை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், மீன் வியாபாரிகள், பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி கோடியக்கரைக்கு செல்ல வேண்டி உள்ளது. அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் பாலபணிகள் நடைபெறும் இடத்திற்கு முன்பே பொதுமக்களை இறக்கிவிட்டு செல்கின்றனர். ஒரு சில பேருந்துகள் மட்டுமே கோடியக்கரை இறுதிவரை செல்கிறது. இதனால் பல நேரங்களில் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோடியக்காடு- கோடியகரையில் இருக்கும் ஒரே பிரதான சாலையில் பாலப்பணி நடைபெறுவதால் மாற்றுப்பாதையை அகலப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் பேருந்தை மறித்து போராட்டம் நடத்தினார்கள். பின்னர் அங்கு வந்த அதிகாரிகள் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

Tags : Kodiakkarai ,
× RELATED கோடியக்கரை சரணாலயத்துக்கு 10 லட்சம் பறவைகள் வருகை