வருவாய் உயர்ந்த நிலையிலும் வரி குறைப்பு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு செய்யவில்லை நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம் குற்றச்சாட்டு

மதுரை: மதுரையில் மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்க தலைவர் மாதவன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சரக்கு மற்றும் சேவை வரி ஆலோசகர் தியாகராஜன், பட்டைய கணக்காளர் முகமதுகான் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்படையில் ஜிஎஸ்டியை ஒன்றிய அரசு கொண்டு வந்தது. உணவு பொருள்களுக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை ஜிஎஸ்டி உள்ளது. வரி வருவாய் உயரும்போது அனைத்துவித வரியும் குறைக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. ஆனால் தற்போது வரை வருவாய் அதிகரித்த நிலையில் எந்தவித வரி குறைப்பு நடவடிக்கையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. இந்த நிதியாண்டில் இருந்து, எந்த ஒரு பொருளுக்கும் 5 சதவீதம் அல்லது 10 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டும்.

அதேபோல், இ - இன்வாய்ஸ் வரி விதிப்பில் உள்ளவர்களுக்கு, இ-வே பில் எடுக்க தேவையில்லை என விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டு மைய தலைவர் சூரஜ் சுந்தரசங்கர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் சாய் சுப்ரமணியம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு செல்லமுத்து, மாவட்ட செல்போன் விற்பனையாளர் சங்க நிர்வாகி ஜோதிபாசு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: