×

எண்ணும்- எழுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 920 அரசு பள்ளிகளில் சிறப்பு பயிற்சி

நாமக்கல், மார்ச் 21: நாமக்கல் மாவட்டத்தில் 920 அரசு பள்ளிகளில் எண்ணும்- எழுத்தும் திட்டம் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் 43ஆயிரம் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காலத்தில் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. அத்தகையை குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்த, தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 3 வரை படிக்கும் குழந்தைகளுக்காக எண்ணும் எழுத்தும் திட்டம் தமிழக பள்ளிக் கல்வித் துறையால் துவங்கப்பட்டது. இதற்காக துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும், தனித்தனியாக ஆசிரியர்களுக்கு எண்ணும் -எழுத்தும் திட்டத்தின்  நோக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

1 முதல் 3ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் எண்களையும், எழுத்துகளையும் அறிந்து கொள்ளும் வகையில் எளியைமாக பயிற்சி அளிக்க தனி புத்தகம் அச்சடிக்கப்பட்டு தரப்பட்டது. ஆசிரியர் கையேடும் வழங்கப்பட்டது. செயல்பாடுகள் மூலம் கற்றலை மேம்படுத்தும் வகையில், பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அரும்பு- மொட்டு- மலர் என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 920 துவக்கப்பள்ளிகளில் எண்ணும் -எழுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதை ஒருங்கிணைந்த பள்ளிகல்வித்துறை அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும், எண்ணும் -எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

காவேட்டிப்பட்டி நடுநிலைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடந்தது. இதில் எண்ணும் -எழுத்தும் வகுப்பறையில் மாணவர்களின் கற்றலுக்கு பயன்படுத்தும் கற்றல் உபகரணங்கள், என் மேடை, செயல்பாடுகளுக்கு பயன்படுத்தும் பொருட்கள், கிரீடம் பயன்பாடு குறித்து பெற்றோருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், மாவட்டங்களின் சிறப்புகளை கூறுதல் மற்றும் மாணவர்களின் திறமைகள் ஆகியவை இந்த நிகழ்ச்சயின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் தேவராஜ், மேற்பார்வையாளர் சசிராணி, பள்ளி தலைமை ஆசிரியர் கயல்விழி, ஆசிரியர் பயிற்றுநர் கிருஷ்ணலட்சுமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள 920 துவக்கப்பள்ளிகளில் எண்ணும் -எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் பயிற்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். மேலும், செயல்பாடுகள் மூலம் அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 2025ம் ஆண்டுக்குள் மாவட்டத்தில் 8வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளும் அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு பெறவேண்டும் என்ற நோக்கில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எண்ணும்- எழுத்தும் திட்டத்தின் தொடர்ச்சியாக மாலை நேரத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடக்கநிலை கல்விக்கு மட்டும், 2798 இல்லம் தேடி கல்வி மையங்கள் மாவட்டத்தில் பல பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் தினமும் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள 43 ஆயிரத்து 177 குழந்தைகள் கல்விகற்று வருகிறார்கள்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags :
× RELATED கோழிகளை திருடிய சிறுவன் சிக்கினான்