துபாய் நாட்டில் சிக்கித்தவிக்கும் எனது தாயை மீட்டுத்தாருங்கள்

தஞ்சாவூர்: வெளிநாட்டு வேலைக்குச் சென்ற தனது தாயார் குறித்து எவ்வித தகவலும் தெரியாததால் அவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் இளம்பெண் கோரிக்கை மனு அளித்தார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

அப்போது பட்டுக்கோட்டை அருகே செங்கபடுத்தான் காடு பகுதியை சேர்ந்த தங்கத்துரை என்பவரின் மகள் சங்கீதா கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 2020 மார்ச் மாதம் எனது தாயார், துபாய்க்கு வீட்டு வேலைக்காக சென்றார். வெளிநாடு சென்றதிலிருந்து சுமார் 10 நாட்கள் மட்டும் எங்களுடன் தொடர்பு கொண்டு பேசி வந்தார். ஆனால் அதற்கு பிறகு கடந்த மூன்று வருடமாக அவரிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

கடந்த 2020 அக்டோபர் மாதம் இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம். மேலும் எனது அம்மாவை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த ஏஜென்ட்டை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு உங்கள் அம்மா துபாயில் இருக்கிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம் எனக் கூறி இணைப்பை துண்டித்து விட்டார். அதன் பிறகு எவ்வித தகவலும் இது நாள் வரை இல்லை. எனவே இந்த மனு மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு எனது தாயாரை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: