×

போலி நகை அடகு விவகாரம் காரைக்கால் மோசடி கும்பல் மயிலாடுதுறையிலும் கைவரிசை

மயிலாடுதுறை, மார்ச் 19: புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வங்கிகள் மற்றும் அடகு கடைகளில் அடகு வைத்து கோடி கணக்கில் நடந்த மோசடி சம்பவம் புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 8 பேரை காரைக்கால் போலீசார் கைது செய்து புதுச்சேரி காலாப்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்த தனியார் நிறுவனத்தின் கிளை மேலாளர் வீரராகவன் (29) என்பவர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 1.12.2021 அன்று புதுச்சேரி மாநிலம் காரைக்கால் புதுத்துறையை சேர்ந்த இமாம் சாஹிப் மகன் முகம்மது மைதீன் (வயது 31) என்பவர் 15 பவுன் அளவில் 2 பவுன் செயின்களை எங்களது நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து 3 லட்சத்து 68 ஆயிரத்து 823 பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு வட்டியும் கட்டவில்லை, நகையையும் திருப்பி மீட்கவில்லை. இதனால் சந்தேகம் எழுந்ததால் அந்த அடகு வைக்கப்பட்ட நகையை சோதனை செய்தபோது, அந்த நகை தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரியவந்தது. எனவே போலி நகையை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) புயல் பாலச்சந்திரன் விசாரணை மேற்கொண்டு முகமதுமைதீன் மீது மோசடி வழக்கு பதிவு செய்தார். விசாரணையில் இந்த முகமதுமைதீன் காரைக்காலில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை போலீசார் கோர்ட் மூலம் உத்தரவு பெற்று புதுச்சேரி சிறையில் உள்ள முகமதுமைதீனை கொண்டு வந்து விசாரணை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Karaikal fraud ,Mayiladuthurai ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...