திருவண்ணாமலை அருகே கோர விபத்து கார் மீது சரக்கு லாரி மோதி தாய், மகன் உட்பட 3 பேர் பலி

* தந்தை, மற்றொரு மகனுக்கு படுகாயத்துடன் சிகிச்சை

* மருத்துவமனையில் இருந்து திரும்பியபோது சோகம்

திருவண்ணாமலை, மார்ச் 18: திருவண்ணாமலை அருகே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் நசுங்கி பலியாகினர். தந்தையும் மற்றொரு மகனும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா சாத்தனூரை சேர்ந்தவர் செல்வம்(45). அவரது மகன் சக்திவேல்(15) என்பவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலையில் இருந்து சாத்தனூருக்கு காரில் மகனை அழைத்துக்கொண்டு சென்றார்.

அப்போது, அவருடன் மனைவி காமாட்சி(40), இளைய மகன் சஞ்சய்(13) ஆகியோரும் காரில் சென்றனர். சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் இளையராஜா(28) என்பவர் காரை ஓட்டிச் சென்றார். இந்நிலையில், திருவண்ணாமலை - ெசங்கம் சாலை வழியாக நள்ளிரவு 12 மணியளவில் கோளாப்பாடி கிராமத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து சென்னைக்கு காலி பீர் பாட்டில்களை ஏற்றிச்சென்ற சரக்கு லாரி, எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது. அதில், அப்பளம்போல கார் நொறுங்கியது. கார் மீது மோதிய வேகத்தில், சரக்கு லாரியின் முன்பக்க டயர் தனியாக கழன்று ஓடியது.

இந்த பயங்கர விபத்தில், காரில் பயணம் செய்த செல்வம் மனைவி காமாட்சி(40), மகன் சக்திவேல்(15) மற்றும் கார் டிரைவர் இளையராஜா(28) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும், செல்வம் மற்றும் இளைய மகன் சஞ்சய் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள், விபத்து குறித்து போலீசுக்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை தாலுகா போலீசார் அங்கு விரைந்துச் சென்றனர். உயிருக்கு போராடிய செல்வம் மற்றும் சஞ்சய் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இருவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்தில் பலியான காமாட்சி, சக்திவேல், இளையராஜாவின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் தாய், மகன் மற்றும் டிரைவர் ஆகியோர் பலியான சம்பவத்தால், சாத்தனூர் கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுதொடர்பாக, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு லாரி டிரைவரான தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம்(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: