×

குடும்ப நலத்துறை சார்பில் 344 மையங்களில் பெண்களுக்கு இலவச கருத்தடை ஊசி

கிருஷ்ணகிரி, மார்ச் 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 344 மையங்களில் பெண்களுக்கான கட்டணமில்லா கருத்தடை ஊசி செலுத்தும் முகாம்களில், 4 தவணைகளில் 1936 பேர் பங்கேற்று செலுத்திக்கொண்டனர். நவீன நாகரீக வாழ்க்கை முறையால், திருமணத்திற்கு பிறகு தாய்மை அடைவதில், பெண்களுக்கு  பல்வேறு சிக்கல்கள் உருவாகிறது. இதற்கு தீர்வு காண, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடிச்செல்லும் பெண்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளது. முதல் குழந்தையை பெற்றெடுத்தவுடன், அடுத்த குழந்தைக்கு பலர் ஆயத்தமாகின்றனர்.

தாய்மை அடையும் பெண்கள், ஒரு குழந்தை பிறந்த பின்னர், 2 ஆண்டுகள் இடைவெளிவிட்டு தான், அடுத்த குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது தான், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும். இதற்காக ஒரு சிலர், குழந்தை பிறந்தவுடன் கருத்தடை மாத்திரைகளை வாங்கி உட்கொள்கின்றனர். கருத்தடை மாத்திரைகளை விட, கருத்தடை ஊசியை பயன்படுத்துவதே சிறந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை அரசும் ஏற்றுக்கொண்டு, கருத்தடை ஊசி செலுத்துவதை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் கருத்தடை ஊசி சிறப்பு முகாம்களை குடும்ப நலத்துறை சார்பில் நடத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில், பெண்களுக்கு தற்காலிக கருத்தடை ஊசி சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை, ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள், மலப்பகுதிகளில் உள்ள மருந்தகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமினை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை 4 தவணைகளில் 1,936 பெண்கள், கட்டணமில்லா கருத்தடை ஊசியை செலுத்தி கொண்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் டாக்டர் எழிரசி யுவராஜ் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை, 4 தாலுகா மருத்துவமனைகள், 5 ஊரக மருத்துவமனைகள், 14 தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 271 துணை சுகாதார நிலையங்கள் என மாவட்டம் முழுவதும், மொத்தம் 344 மையங்களில் கட்டணமில்லா கருத்தடை ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் கருத்தடை ஊசியை ஒருமுறை செலுத்திக் கெண்டால், கர்ப்பப்பை புற்றுநோய், கருப்பை கட்டி தவிர்க்கப்படுகிறது. 3 மாதத்திற்கு ஒருமுறை கருத்தடை ஊசி போட்டுக்கொள்ளலாம். முதல் ஊசி மாதவிடாய் தொடங்கிய 5வது நாளிலும், 2ம் ஊசி 90 நாளுக்கு பிறகும் போடப்படுகிறது. ஒவ்வொரு ஊசியும், 3 மாதத்துக்கு ஒருமுறை செலுத்தப்படுகிறது.

இதனால், இரு குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி கிடைக்கிறது. பாலுட்டும் தாய்மார்களுக்கும் கருத்தடை ஊசி போடப்படுகிறது. இந்த முகாம் துவங்கப்பட்டு இதுவரை, முதல் தவணையாக 885 பெண்களும், 2வது தவணையாக 479 பெண்களும், 3வது தவணையாக 313 பெண்களும், 4வது தவணையாக 259 பெண்களும் என மொத்தம் 1936 பெண்கள் கட்டணமில்லா கருத்தடை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இந்த முகாம்களில் பங்கேற்று, பெண்கள் கட்டணமில்லா தடுப்பூசியை செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Family Welfare Department ,
× RELATED மாவட்ட சுகாதாரம், குடும்ப நலத்துறை...