×

பட்டினச்சேரியில் குருடாயில் கடலில் கலப்பு பிரச்னை கடற்கரையில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற முடிவு

நாகப்பட்டினம்: பட்டினச்சேரியில் குருடாயில் கடலில் கலப்பு பிரச்னை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கடற்கரையில் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்ற முடிவு செய்து சிபிசிஎல் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பூமிக்கு அடியில் பொதுத்துறை நிறுவனமாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சிபிசிஎல்) நிறுவனம் சார்பில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டது. இந்த குழாயில் கடந்த 2ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதனால் குருடாயில் வெளியேறி கடலில் கலந்தது. நாகூரில் இருந்து வேளாங்கண்ணி வரை கடலோர கிராமங்களில் எண்ணெய் படலம் படர்ந்ததால் மீனவ கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் குழாயை அகற்ற கோரி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனம் கடந்த 5ம் தேதி குழாய் உடைப்பை சரி செய்தது. 6ம் தேதி கலெக்டர் அருண்தம்புராஜ் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.

மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்கும் வரை குழாய் வாயிலாக எவ்விதமான செயல்பாடுகள் நடைபெறகூடாது என உத்தரவு பிறப்பித்தார். இதன் இடையே அமைச்சர் மெய்யநாதன் ஆய்வுகள் மேற்கொண்டு சிபிசிஎல் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என கூறினார். ஆனால் கடந்த 10ம் தேதி சிபிசிஎல் நிறுவனம் தண்ணீர் செலுத்தி சோதனை மேற்கொண்டது. மீண்டும் குழாய் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டது.  இதனால் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். நாகப்பட்டினம் தாலுகா மீனவர்கள் ஒன்றாக இணைந்து குழாய் அகற்றவில்லை என்றால் சிபிசிஎல் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் கடந்த 12ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். விரைவில் சமாதான கூட்டம் நடத்தப்படும். இதில் நிரந்தர தீர்வு காணப்படும் என அறிவித்தார். இதையடுத்து நேற்று (16ம் தேதி) நாகப்பட்டினம் மீன்வளத்துறை அலுவலகத்தில் வருவாய்த்துறை, காவல்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில், நாகப்பட்டினம் தாலுகா மீனவர்கள் மற்றும் சிபிசிஎல் நிறுவனத்தினருடன் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது.  

இதில் மே மாதம் 31-ம் தேதிக்குள் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயை சிபிசிஎல் நிறுவனம் அகற்றி கொள்ள ஒத்துக்கொண்டது. ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் பதிக்கப்பட்ட குழாயை அகற்ற ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகளை கொண்ட சமாதான கூட்டம் விரைவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை நாகப்பட்டினம் தாலுகா மீனவர்கள் ஏற்றுகொண்டனர். இதை தொடர்ந்து நாகப்பட்டினம் தாலுகா மீனவர்கள் கூறியதாவது: நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் சிபிசிஎல் நிறுவனம் சார்பில் புதைக்கப்பட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் மீன்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எனவே நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மீன்களை வாங்கி சாப்பிடலாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிபடுத்தியுள்ளனர்.  மேலும் மே மாதம் 31ம் தேதிக்குள் சிபிசிஎல் நிறுவனம் பாதித்துள்ள குழாயை அகற்றி கொள்வதாக ஒத்துகொண்டுள்ளது. இதை நாகப்பட்டினம் தாலுகா மீனவ பஞ்சாயத்தார்கள் ஏற்றுக்கொண்டோம் என கூறினர்.

Tags : Kurudail ,Pattinacherry ,
× RELATED நாகப்பட்டினத்தில் கச்சா எண்ணெய்...