×

தூத்துக்குடியில் மனுக்கள் பெறும் முகாம் துவக்கம் பொதுமக்களின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றி தரப்படும் அமைச்சர் கீதாஜீவன் உறுதி

தூத்துக்குடி, மார்ச் 17: தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் கீதாஜீவன், கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு விரைந்து நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளித்து உள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை  அமைச்சருமான கீதா ஜீவன், தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் குறைகளை எளிதில் தெரிவிப்பதற்கு வசதியாக ஏற்கனவே வாட்ஸ்அப் எண் கொடுத்துள்ளார். இதில் தெரிவிக்கப்படும் குறைகள்  அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் ஆய்வு கூட்டம் நடத்தி மக்களின் கோரிக்கை மனுக்களை காகிதமாக எண்ணாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் ஆவணமாக கருதி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இதன் அடிப்படையில்  தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 52 வார்டுகளிலும் பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனை நேரில்  சந்தித்து மனு கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், நேற்று துவங்கி வரும் 18ம் தேதி வரை என டூவிபுரத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அமைச்சர் கீதாஜீவனை பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக அளித்து வருகின்றனர்.

முதல் நாள் முகாமில் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை,  முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், மின்விளக்கு,  வீட்டுமனை பட்டா, பஸ் வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் விரைவில்  பரிசீலனை செய்யப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று  அமைச்சர் கீதாஜீவன் உறுதியளித்தார். இதில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், துணை செயலாளர் கனகராஜ், மாவட்ட மீனவரணி  அமைப்பாளர் அந்தோனி ஸ்டாலின், துணை அமைப்பாளர் சேசையா,  மாநகர மருத்துவ அணி  அமைப்பாளர் அருண்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற  செல்வின், அருண்சுந்தர், அல்பர்ட், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், கவுன்சிலர்கள் கந்தசாமி, அந்தோனி பிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்  செந்தில்குமார், வட்ட செயலாளர்கள் கதிரேசன், பாலு, வட்ட பிரதிநிதி பாஸ்கர்,  தகவல் தொழில்நுட்ப அணி மார்க்கின் ராபர்ட், அற்புதராஜ் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

Tags : Minister ,Geethajeevan ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடியில் கனிமொழிக்கு ஆதரவாக...