×

பங்குனி மாதப்பிறப்பை முன்னிட்டு தச்சநல்லூர் சந்திமறித்த அம்மன் கோயிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை

நெல்லை, மார்ச் 16: பங்குனி மாதப்பிறப்பையொட்டி நெல்லை தச்சநல்லூர் சந்திமறித்த அம்மன் கோயிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று குங்குமத்தால் அர்ச்சித்து அம்மனை வழிபட்டனர்.  நெல்லை தச்சநல்லூரில்  பிரசித்திபெற்ற சந்திமறித்த அம்மன் கோயில் நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சிறப்புமிக்க இக்கோயிலில் தச்சநல்லூர் ஜோதி வழிபாட்டு ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் தமிழ் மாதப்பிறப்பு தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும். அத்துடன் பங்குனி மாதப்பிறப்பன்று சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 35வது ஆண்டாக சிறப்பு திருவிளக்கு பூஜை நேற்று நடந்தது. மாலை 6.30 மணிக்கு துவங்கிய இந்த  சிறப்பு திருவிளக்கு பூஜையில் தச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த சிறுமிகள் உள்ளிட்ட பெண்கள் திரளாகப் பங்கேற்று குங்குமத்தால் அர்ச்சனை செய்து சந்திமறித்தம்மனை வழிபட்டனர். முன்னதாக திருவிளக்கு பூஜையை முன்னிட்டு சந்திமறித்த அம்மனுக்கு நேற்று காலை மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், இளநீர், சந்தனம், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில்  பக்தர்கள் திரளாகப் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், ஜோதி வழிபாட்டு ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

Tags : Thiruvilakku ,Thachanallur Santhimaritha Amman Temple ,Panguni ,
× RELATED குருவன்கோட்டை மாரியம்மன் கோயில் கொடை விழா 3001 திருவிளக்கு பூஜை வழிபாடு