திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள குன்னாங்கல் பாளையத்தில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் உத்திரபிரதேசத்தை சேர்ந்த அப்துல் கசாம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த 7ம் தேதி இரவு சின்னக்கரையில் உள்ள பள்ளிவாசல் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது அவரை வழி மறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் கேட்டுள்ளனர். செல்போனை அறையில் வைத்து விட்டு வந்ததாகவும், பணம் இல்லை எனவும் அப்துல் கசாம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் அப்துல் கசாமை தாக்கி அவரது சட்டை பையில் இருந்த 200 ரூபாய் பணத்தை பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் அப்துல் கசாம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய வால்பாறையை சேர்ந்த ராம்பிரகாஷ் (22), ஆகாஷ் (18), திருநெல்வேலியை சேர்ந்த பேச்சியப்பன் (32) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து அவர்களை நேற்று கைது செய்த பல்லடம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

