திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் உள்ள தியாகி சீனிவாசராவ் நினைவகம் சீரமைக்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பாஸ்கர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் விடுதலை போராட்ட வீரரும், விவசாயிகள் இயக்கத்தின் ஒன்றுப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் சமூக விடுதலையை பெற்று தந்தவரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவருமான தியாகி பி.சீனிவாசராவ் நினைவகம் தமிழக அரசு சார்பில் 2009 நவம்பர் 14ம் தேதி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நன்றியோடு நினைவு கூறுகிறோம். தியாகி பி.சீனிவாசராவ் நினைவகம் கால வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களாலும், கஜா புயலினாலும் பழுதடைந்துள்ளது. பழுதுகளை நீக்கி எதிர்கால தலைமுறைக்கு உதவும் வகையில் சிரமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இதற்கான செலவு மதிப்பீடும் பணிகள் குறித்த வரைவை கடந்த 30.08.2021 சங்கத்தின் சார்பிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்,
வரும் ஏப்ரல் 10 ம் நாள் 113வது பிறந்த நாள் வருகை தர உள்ளதால் தியாகி பி.சீனிவாசராவ் நினைவு மணிமண்டபத்தை பழுது நீக்கம் செய்து புதுப்பித்து தருவதோடு மணிமண்டபத்தில் தியாகி பி.சீனிவாச ராவ் சிலை அமைக்கவும், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்திடவும், நினைவு மணிமண்டபத்தில் நூலகமாக மாற்றிடவும் எனவே தக்க ஆய்வு செய்து, உரிய உத்தரவுகள் மூலம் தியாகி பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவகத்தை புதுப்பித்து தரவேண்டும் இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
