நாகப்பட்டினம்,மார்ச்13: தமிழ்நாடு அரசு வணிவரி பணியாளர் சங்க கோரிக்கைகளை ஏற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வணிக வரித்துறையில் பதவி உயர்வை ஒரே நேரத்தில் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் சார்பில் நன்றிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ் மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்க மாநில தலைவர் முருகேசன், பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் கூட்டாக தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த பொழுது, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஆய்வாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய சங்கத் தலைவர் துப்புரவு ஆய்வாளராக பணியில் சேர்ந்த நாங்கள் அதே பணியில் ஒய்வுபெறும் நிலை உள்ளது. இதனை மாற்றி குறைந்தபட்ச பதவி உயர்வாவது வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய மேயர் துப்புரவு அலுவலர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கினார். கொடுத்த வாக்குறுதிப்படி துப்புரவு அலுவலர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இன்றைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பில் இருந்த போது துப்புரவு பணியாளர்களுக்கு துப்புரவு மேற்பார்வையாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, பதவி உயர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு வணிவரி பணியாளர் சங்க கோரிக்கைகளை ஏற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பதவி உயர்வு வழங்கிமைக்கு நன்றிகள் தெரிவித்து கொள்கிறோம். அதே போல் அமைச்சர் சுப்பிரமணியன், சங்க மாநில மாநாட்டில் அளித்த வாக்குறுதிப்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கான பதவி உயர்வை விரைவில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
