×

கடவூர் அருகே தளிவாசல் பகுதிகளில் ஜியோ பைப்லைன்கள் அமைத்து காவிரிகுடிநீர் வழங்ககோரி சாலைமறியல்

தோகைமலை, மார்ச் 13: கரூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக முள்ளிப்பாடி ஊராட்சி அமைந்து உள்ளது. இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2002-2003ம் ஆண்டு மாவட்டம் நிர்வாகம் காவேரி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதற்காக சேர்வைகாரன்பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு இங்கிருந்து செங்காடு, மாயண்டி தெரு, வீரகவுண்டன்பட்டி, கொம்பால தெரு, சேர்வைகாரன்பட்டி, குறிஞ்சிமலை, களத்துப்பட்டி, தளிவாசல், பெரிய தளிவாசல், குட்டியலூர், எல்லைக்காட்டனூர், களத்துப்பட்டி, ஆட்டுக்காரன் தெரு ஆகிய பகுதிகளுக்கு பிவிசி பைப் லைன்கள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு 2 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் சென்று உள்ளது. அதன் பிறகு பிவிசி அனைத்து பைப்லைன்களும் சேதமாகி காவிரி குடிநீர் செல்லாமல் தடைஏற்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகம் சார்பாக அனைத்து கிராமங்களுக்கும் (ஜியோ) இரும்பு பைப் லைன் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் போதிய நிதி இல்லாமல் இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தளிவாசல் பகுதிக்கு குடிநீர் சரியாக வராமல் இருந்து உள்ளது. இதனால் தளிவாசல் பகுதிகளில் சேதமான பிவிசி பைப் லைன்களை மாற்றி இரும்பு (ஜியோ) பைப்லைன் அமைத்து நிரந்தரமான காவேரி குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கடவூர் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு (ஜியோ) இரும்பு குழாய் அமைத்து காவிரி குடிநீர் வினியோகம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே உரிய நிதி வந்தவுடன் அனைத்து பகுதிகளிலும் உள்ள பிவிசி பைப்லைன்களை அகற்றிவிட்டு (ஜியோ) இரும்பு குழாய் அமைத்து காவிரி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை அடுத்து சாலை மறியல் போராட்டம் செய்த மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Talivasal ,Kadavur ,
× RELATED சாமி சிலையை சேதப்படுத்திய பள்ளி பஸ் டிரைவர் கைது