×

கைதிகளின் துணியை துவைக்க வாஷிங்மிஷின்கள் பயன்பாட்டிற்கு வந்தது சிறைத்துறை சரக டிஐஜி தொடங்கி வைத்தார் வேலூர் மத்திய, பெண்கள் தனிச்சிறையில்

 வேலூர்: வேலூர் மத்திய, பெண்கள் சிறைகளில் கைதிகளின் துணியை துவைக்க வாஷிங்மிஷின்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைகண்ணன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வேலூர், சென்னை புழல், கோவை, சேலம், மதுரை, கடலூர் உள்ளிட்ட 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பயன்பாட்டிற்காக திருச்சி சிறையில் 30 கைதிகள் தயாரிக்கும் காந்தி சோப்பு மாதந்தோறும் தலா 4 வழங்கப்படுகிறது. மேலும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வகையில் நல்லெண்ணெய், பல்பொடி ஆகியவை வழங்கப்படுகிறது. சோப்பை வைத்து அவர்களின் துணியை அவர்களே துவைத்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில், மத்திய மற்றும் பெண்கள் தனிச்சிறைகளில் உள்ள கைதிகள் துணியை துவைக்க பெரிய அளவிலான வாஷிங்மிஷின்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 9 மத்திய சிறை, 3 பெண்கள் தனிச்சிறைகளில் கைதிகளின் நலன் கருதி ₹60 லட்சம் மதிப்பில் 12 வாஷிங்மிஷின்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 100 கிலோ துணியை துவைக்கலாம். வேலூர் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையில் கைதிகளுக்காக புதிதாக வாங்கப்பட்ட வாஷிங்மிஷின்களை வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைகண்ணன் தொடங்கி வைத்தார். அப்போது கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான் மற்றும் சிறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், ‘சிறைகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடை செய்யப்பட்ட பொருட்களை சிறைக்குள் கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் ஸ்கேனர் வாங்கப்பட்டுள்ளது. சிறைகளில் புதிதாக பயன்பாட்டிற்கு வந்துள்ள வாஷிங்மிஷின்களால் கைதிகளின் துணி துவைக்கும் நேரம் மிச்சமாகும்’ என்றனர். படவிளக்கம்... வேலூர் பெண்கள் சிறையில் கைதிகளின் பயன்பாட்டிற்கு புதிய வாஷிங்மிஷினை சரக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைகண்ணன் தொடங்கி வைத்தார். உடன் சிறை கண்காணிப்பாளர் அப்துல்ரகுமான்.

Tags : DIG ,Jail Department ,Vellore Central ,
× RELATED கள்ளக்குறிச்சி முழுவதும் 7 எஸ்பிக்கள்...