×

நெல்லையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் ரூ.5.76 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

நெல்லை, மார்ச் 12: நெல்லையில் நடந்த மோட்டார் வாகன விபத்து சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 228 வழக்குகளில் 137 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.5 கோடியே 76 லட்சத்து 47 ஆயிரத்து 549 இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
நெல்லை மாவட்டம் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான சிறப்பு மக்கள் நீதிமன்றம் நேற்று நெல்லை நீதிமன்றத்தில் நடந்தது.  மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் 2023ம் ஆண்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்கிற்கான நெல்லை சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சிறப்பு நீதிமன்றம் நெல்லை நீதிமன்றம் உள்பட 5 தாலுகா நீதிமன்றங்களில் நடந்தது.

நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) அன்பு செல்வி தலைமையில் 3வது மாவட்ட கூடுதல் நீதிபதி பன்னீர்செல்வம், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகன்ராம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், கூடுதல் சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன், நெல்லை வக்கீல் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் காமராஜ், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர் சுந்தரபாண்டியன்  ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மூத்த வழக்கறிஞர்கள் வி.டி. திருமலையப்பன், மரியக்குழந்தை, ஜாபர் அலி,  ஜோதி முருகன், மோகன்ராஜ் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மொத்தம் 6 அமர்வுகளில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் உட்பட  மொத்தம் 228 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 137 வழக்குகள் முடிக்கப்பட்டு 5கோடியே 76 லட்சத்து 47ஆயிரத்து 549 சமரச தொகைக்கு முடிக்கப்பட்டது. இதில் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆகியோர் பங்கேற்றனர்.  இதற்கான ஏற்பாடுகளை நெல்லை  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான இசக்கியப்பன் செய்திருந்தார்.

Tags : Special People's Court ,Nella ,
× RELATED பள்ளி கட்டிடத்தை விரைந்து...