பழநி: பழநியில் சோதனையில் ஈடுபட்ட போலீசாரின் வாகனத்தை சேதப்படுத்தி சென்ற 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பழநி பஸ் நிலையம் முன்பு கடந்த வாரம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் 3 இளைஞர்கள் தகராறு செய்தனர். மேலும் அவர்கள், போலீசாரின் வாகனத்தை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி விட்டனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தப்பிய 3 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாரின் வாகனத்தை சேதப்படுத்தியதாக பழநி மதினா நகரை சார்ந்த ஆஷிக் அரபா (22), ஆஷிக் ராஜா (22), அசாருதீன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இவர்கள் மீது அரசு சொத்தை சேதப்படுத்தியது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
