×

மாசி திருவிழாவையொட்டி ஆதிநாதர் கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீவைகுண்டம், மார்ச் 11: ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு தெப்ப உற்சவம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசி திருவிழா கடந்த மார்ச் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. மார்ச் 5 தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு கருட வாகனத்தில் சுவாமி பொலிந்துநின்ற பிரானும், ஹம்ச வாகனத்தில் சுவாமி நம்மாழ்வார் எழுந்தருளி வீதி உலா வரும் வைபவமும் நடந்தது. நேற்று  முன்தினம் 9ம் திருவிழாவில்  திருத்தேரோட்டம் நடந்தது.

10ம் திருவிழாவான நேற்று தெப்ப உற்சவம் நடந்தது. தெப்ப உற்சவத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம், நித்தியல் கோஷ்டி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு உற்சவர் பொழிந்து நின்றபிரான் பல்லக்கில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் பொலிந்து நின்ற பிரான் மூன்று முறை தெப்பக்குளத்தில் சுற்றி வந்தார். தெப்ப உற்சவத்தில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், கோயில் செயல் அலுவலர் அஜித், பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தெப்ப உற்சவத்திற்காக 25 ஆண்டுகளுக்கு பிறகு தென்கரை குளத்திலிருந்து சீரமைக்கப்பட்ட தனி கால்வாயிலிருந்து நேரடியாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு தெப்பக்குளம் நிரப்பப்பட்டது பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று இரவில் சுவாமி நம்மாழ்வார் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் செய்துள்ளனர்.

Tags : Utsavam ,Adinathar Temple ,Masi festival ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை