×

சமயபுரம் அருகே வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

முசிறி, மார்ச் 11: திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட எஸ்பி சுஜித்குமார் தலைமை தாங்கி பேசியதாவது: புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் மேற்கொள்வது போல சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைகள் மேற்கொண்டு வரும் நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு துணையாக தமிழ்நாட்டின் காவல் துறையினர் இருக்கிறோம்.

தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக எந்த தாக்குதல்களும் நடக்கவில்லை,இது குறித்த விழிப்புணர்வு காவல்துறை சார்பில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கபட்டுள்ளனர் என்று பேசினார். லால்குடி கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான சமயபுரம், சிறுகனூர், லால்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் கம்பெனி மற்றும் கட்டுமான நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடத்தபட்டது. அப்போது பேசிய போலீஸ் அதிகாரிகள் உங்களுக்கு ஏதாவது அச்சுறுத்தல் நடந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி எண் 94981 81325 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வோம். சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை நம்ப வேண்டாம். உங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் காவல்துறை அதற்கு உறுதுணையாக இருக்கும் என பேசினர். கூட்டத்தில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம், சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி, மற்றும் லால்குடி உட்கோட்ட சமயபுரம், சிறுகனூர் லால்குடி உள்ளிட்ட காவலர்கள் மற்றும் பீகார்,மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஒரிசா உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : North ,State ,Samayapuram ,
× RELATED படிக்கட்டில் பயணம் செய்தபோது ரயிலில்...