×

சிறுதானியங்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது கல்லூரி முதல்வர் பேச்சு செய்யாறு அரசு கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி

செய்யாறு: சிறுதானியங்களுக்கான முக்கியத்துவம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்று கண்காட்சியை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் பேசினார்.  தாவரவியல் துறையும், திருவண்ணாமலை வேளாண் அறிவியல் மையமும் இணைந்து சர்வதேச சிறுதானிய ஆண்டினையொட்டி செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தாவரவியல் துறை துறைத்தலைவர் வே.கங்காதேவி வரவேற்றார். முதல்வர் ந.கலைவாணி கண்காட்சியை தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது: இயற்கையோடு இணைந்து வாழ்வதே நலம். அதற்கு நமக்கு துணையாக இருப்பவை சிறுதானியங்களே. உலகம் முழுவதும் சிறுதானியங்களுக்கான முக்கியத்துவம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக பார்க்கப்படுகின்றது. இந்தியா முன்மொழிந்தபடி ஐக்கிய நாடுகளின் பொது சபை 2023-ஐ சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்தது.

இதனை போற்றும் விதமாகவும், பாரம்பரிய உணவு தானியங்களை மக்களிடையே ஊக்குவிக்க மீண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பிரபலப்படுத்துவதற்காகவும் சிறுதானியங்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.  இந்த கண்காட்சி சிறுதானிய பொருட்கள் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என்றார்.  விழாவில் கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானி வி.சுரேஷ், சிறு தானிய நிபுணர் கலந்து கொண்டு சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட தானிய வகைகள், சிறு தானியங்கள், பாரம்பரிய ஊட்டச்சத்து தானியங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன.
மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு சிறுதானியங்களின் விதை உற்பத்தி தொடர்பான துண்டு பிரசுரங்கள், ஓவியங்கள். சிறுதானிய உணவு வகைகள், சிறுதானிய முக்கியத்துவத்தினை விளக்கும் பதாகைகள் ஆகிய பல்வேறு நிகழ்வுகளில் சிறுதானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரியில் சிறுதானிய கண்காட்சியை கல்லூரி முதல்வர் ந.கலைவாணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் தாவரவியல் துறை தலைவர் வே.கங்காதேவி.


Tags : College Principal ,Government College Exhibition ,Government College ,
× RELATED சிவகங்கையில் செயல்படும் அரசு மகளிர்...