×

பல கோடி சுருட்டி தலைமறைவான விஆர்எஸ் நிறுவனத்தின் கடை சீலை உடைத்து போலீசார் 7 மணிநேரம் தொடர் சோதனை: பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

வந்தவாசி, மார்ச் 10: வந்தவாசி செய்யாறு பகுதியில் பல கோடி சுருட்டி மோசடி செய்து தலைமறைவான விஆர்எஸ் நிறுவனத்தின் கடை சீலை உடைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து 7 மணி நேரம் சோதனை செய்தனர். கடையை திறந்ததால் பொருட்கள் வழங்குவதாக நினைத்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி செய்யாறு பகுதியில் விஆர்எஸ் சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் தீபாவளி பொங்கல் பண்டு சீட்டு நடத்தி வந்தனர். ஒரு வருடத்திற்கு ரூ.36 ஆயிரம் செலுத்துபவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான தங்க நாணயம், மளிகை பொருட்கள் வழங்குவதாக ஆசை ஏற்படுத்தி சில வருடங்கள் அந்த பொருட்களை வழங்கி வந்துள்ளனர்.

இதனை நம்பி விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதி முகவர் மூலமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மாதந்தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதில் அந்த நிறுவனத்தினர் ரூ.500 கோடிக்கும் அதிகமான பணம் வசூல் செய்துவிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் உத்தரமேரூர், வந்தவாசி, செய்யாறு, காஞ்சிபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இதில் பொள்ளாச்சியில் விஆர்எஸ் சூப்பர் மார்க்கெட் ஒன்றை புதியதாக திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த தீபாவளியின் போது பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தங்க நாணயம், மளிகை பொருட்கள் வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடையை முற்றுகையிட்டனர்.

இதுதொடர்பாக தினந்தோறும் தகராறு ஏற்பட்டதால் வருவாய்த் துறையினர் கடந்த அக்டோபர் மாததே கடைக்கு சீல் வைத்தனர். இதையடுத்து பொதுமக்களுக்கு பாண்டு பத்திரம் கொடுத்து மூன்று மாதத்தில் அனைவருக்கும் தவணை முறையில் பணம் கொடுப்பதாக விஆர்எஸ் நிறுவனத்தினர் உறுதி அளித்த நிலையில் திடீரென கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு நிறுவன உரிமையாளர் சம்சு மொய்தீன் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வந்தனர்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைமறைவான சம்ஸ் மொய்தீன் குடும்பத்தினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 20 குழுக்களாக காஞ்சிபுரம் உத்தரமேரூர் செய்யாறு, வந்தவாசி, பொள்ளாச்சி உள்ளிட்ட விஆர்எஸ் நிறுவன தொடர்புடைய பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் வந்தவாசியில் சீல் வைக்கப்பட்ட விஆர் எஸ் சூப்பர் மார்க்கெட்டில் வருவாய்த் துறையினர் முன்னிலையில் சீலை உடைத்து திருவள்ளுர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை 11 மணி முதல் முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து 7 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கணினியில் உள்ள 5 ஹாட் டிக்ஸ், 3 சியூபி, ஒரு செல்போன் ரூ.25 ஆயிரத்து 200 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். தர்மபுரி மாவட்ட இன்ஸ்பெக்டர் தலைமையிலான ஒரு குழுவினர் வந்தவாசி டவுன் கவரை தெருவில் சம்சு மொய்தீன் வசித்து வந்த வாடகை வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
சம்சு மொய்தீனுக்கு வந்தவாசி பகுதியில் மறைமுகமாக உதவி செய்து வரும் ஒரே பெயரை கொண்ட 2 முக்கிய புள்ளிகள் குறித்து விசாரணை செய்தனர். வி.ஆர்.எஸ் சூப்பர் மார்க்கெட் சீலை உடைத்து போலீசார் சோதனை செய்தபோது கடை திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படும் என நினைத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வந்தவாசி பகுதியில் பல கோடி மோசடி செய்து தலைமறைவான சம்சு மொய்தீனுக்கு சொந்தமான விஆர்எஸ் சூப்பர் மார்க்கெட்டின் சீலை உடைத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Tags : VRS ,
× RELATED தெற்கு ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில்...