ஸ்ரீவைகுண்டம், மார்ச் 10: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மார்த்தாண்டநகரை சேர்ந்தவர் கேந்திரவடிவேல். இவரது மனைவி பாலம்மாள். இவர், ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி 9வது வார்டில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு கவுன்சிலராக உள்ளார். இவரது மகன் பிரேம்நாத். இவருக்கு சொந்தமான வயல்பகுதி மார்த்தாண்டநகரில் உள்ளது. பிரேம்நாத் தற்போது வயலில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் பயிரிட்டுள்ளார்.
நேற்று காலை தோட்டத்திற்கு மருந்து அடிப்பதற்காக சென்ற வேலையாட்கள், அங்கு சுமார் 350 வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள், பிரேம்நாத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று வாழை தோட்டத்தை பார்வையிட்டனர். மேலும் புகாரின் பேரில் வழக்கு பதிந்து வாழைகளை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
