×

குறைவு முத்திரை தீர்வை சிறப்பு முகாம்: நெல்லை மாவட்டத்தில் 2 மாதங்களில் ரூ.46 லட்சம் வசூல்

நெல்லை, மார்ச் 10:  முத்திரைத் தீர்வை குறைவு ஆவணங்களை விடுவிக்க நடத்தப்பட்ட சிறப்பு முகாமின் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் ரூ.46 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவுத் துறை மூலம் ஆவணங்களை பதிவுசெய்யும் சிலர் வழிகாட்டி மதிப்பை விட குறைவாக முத்திரை தீர்வை செலுத்தி
விடுவர். அது தொடர்பான ஆவணங்கள் பதிவுத் துறையால் உடனே வழங்கப்படாது. அந்த குறைவு முத்திரைத் தீர்வையை வசூல் செய்வதற்காக தனித்துணை கலெக்டர் (முத்திரை) பிரிவிற்கு அனுப்பப்படும்.

இந்த ஆவணங்கள் தொடர்பாக முத்திரை பிரிவு தனி தாசில்தார்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட நிலங்களை கள ஆய்வு செய்து முத்திரைத் தீர்வை குறைவு தொடர்பாக அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில் ஆவணம் பதிவு ெசய்தவர்களிடம் குறைவு முத்திரைத் தீர்வை வசூலிக்கப்படுவது வழக்கம். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தவும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கூறுகையில் ‘‘தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வாயிலாக, நிலுவையில் உள்ள இனங்களை குறைத்திட சிறப்பு முனைப்பு இயக்கம் வருவாய் மாவட்டம் தோறும் நடத்த பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி பதிவு மாவட்டங்களில் 01.01.2023 முதல் 31.03.2023 வரையிலான காலத்திற்கு சிறப்பு முனைப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு முகாமின் மூலம் பிப்ரவரி 2023 வரை 104 ஆவணங்கள், ரூ.46 லட்சத்து 24 ஆயிரத்து 866 வசூலிக்கப்பட்டு, அசல் ஆவணங்கள் ஆவணதாரர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, பதிவு மாவட்டங்களை உள்ளடக்கிய 22 சார் பதிவகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக குறைவு முத்திரைத் தீர்வையை செலுத்தத் தவறி, அதன் காரணமாக நிலுவையாக உள்ள ஆவணங்களை, அந்த ஆவணங்களுக்குரிய நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரைத் தீர்வையை சம்பந்தப்பட்ட ஆவணதாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, ஆவணதாரர்கள் தங்கள் ஆவணத்திற்கான குறைவு முத்திரைத் தீர்வையை அசல் மற்றும் வட்டியுடன் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு கட்டணம் செலுத்தி அசல் ஆவணத்தை விடுவித்துக் கொள்ளலாம். நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர்  அலுவலக வளாகத்தில் உள்ள நெல்லை, தனித்துணை கலெக்டர்(முத்திரை) மற்றும் தனி தாசில்தார், நெல்லை ஆகியோரை தொடர்பு கொண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆவணங்களை பெற்று பயனடையலாம்’’ என்றார்.

Tags : Nellai ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...