ஊட்டி: ஊட்டியில் வனப்பகுதிகளுக்குள் உலா வரும் குதிரைகளால் வன விலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம் நீடிக்கிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை பார்த்து ரசிப்பது மட்டுமில்லாமல் குதிரை சவாரி, படகு சவாரி, நடைபயணம் போன்றவை மேற்கொள்கின்றனர். குறிப்பாக குதிரை சவாரி மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஊட்டியில் ஏராளமான குதிரைகள் காண முடியும். இந்த குதிரைகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சவாரிக்கு அழைத்து செல்லபவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் வைத்தள்ள குதிரைகளை முறையாக பராமரிப்பதில்லை.
இவற்றை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கை எடுத்தாலும் பலனில்லை. இதனிடையே ஆதரவின்றி விடப்படும் குதிரைகள் தற்போது ஊட்டி - கூடலூர் சாலையில் தலைக்குந்தா, சாண்டிநல்லா உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள வனப்பகுதிகளுக்குள் உலா வருகின்றன. வனப்பகுதிகளுக்குள் இருப்பதால் வனங்களில் உள்ள வன விலங்குகளுக்கு நோய் பரவ கூடிய அபாயம் நீடிக்கிறது. எனவே வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு வனப்பகுதிகளில் உலா வரும் குதிரைகளை அப்புறப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
