ஊட்டி: 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடக்கும் நிலையில் வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பொதுவாக பள்ளி தொடர் விடுமுறை நாட்களின் போது அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல், வார விடுமுறை நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள். இதனால், எப்போதும் ஊட்டி நகரம் சுற்றுலா பயணிகளால் களை கட்டி காணப்படும். குறிப்பாக, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா எப்போதும் சுற்றுலா பயணிகளால் களை கட்டும்.
ஆனால், தற்போது தமிழகத்தில் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள், சிபிஎஸ்இ தேர்வுகள் மற்றும் பல பள்ளிகளில் திருப்புதல் தேர்வு நடக்கிறது. அதேபோல், அண்டை மாநிலங்களிலும் பல பள்ளிகளில் செய்முறை தேர்வு மற்றும் திருப்புல் தேர்வு போன்றவைகள் நடக்கிறது. இதனால், வார நாட்களான திங்கள் முதல் வெள்ளி வரையில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது வார நாட்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். 12 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் முடியும் வரை வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
