ஊட்டி: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நீலகிரி மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய அரசு கடந்த ஓராண்டில், 8 முறை எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு சிலிண்டருக்கு ரூ.1180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கமர்சியல் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி வரும் ஒன்றிய அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதன் ஒரு பகுதியாக ஊட்டியில் உள்ள ஏடிசி பகுதியில் நீலகிரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்வரி பாபு தலைமை வகித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் விவேக்லஜபதி, செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜ், ப்ரியா நசீம்கர், ரகு சுப்பன், நகர தலைவர் நித்யசத்யா, முன்னாள் நகர தலைவர் கெம்பைய்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, சிலிண்டர் விலை உயர்த்தியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், வட்டார தலைவர் சுரேஷ், மாவட்ட செயலாளர்கள் ஊட்டி ரவிக்குமார், ரபீக், பீமன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாகீர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ், மகளிர் நிர்வாகிகள் ரீனா, கோமதி, பிரேமா, பிரியங்கா, மேரி, எலிசபெத், கிளாரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
