×

காரைக்கால் அருகே பொன்னம்மா காளியம்மன் கோயில் மாசிமக தீர்த்தவாரி

காரைக்கால்: காரைக்கால் அடுத்த தலத்தெரு பகுதியில் பழமை வாய்ந்த  பொன்னம்மா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் ராகு கால பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ராகு கால வேளையில் அம்மனை தரிசித்தால் எண்ணியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் மாசி மக உற்சவம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மக உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  பொன்னம்மா காளியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி தல தெருவிலிருந்து கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்திற்கு மேளதாளங்களுடன் வந்து சேர்ந்து கிளிஞ்சல்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார் முன்னிலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலத்தெரு கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் கிளிஞ்சல்மேடு மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




Tags : Ponnamma Kaliamman temple ,Karaikal ,Masimaha Theerthavari ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை